

இயற்கை வழி வேளாண்மை மண்ணை வளமாக்குவதுடன், ஆரோக்கியத்துக்கும் அடித்தள மிடுகிறது என வலியுறுத்தி, குமரி மாவட்டத்தின் பட்டி, தொட்டியெங்கும் சென்று, தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கிறார் ஓய்வு பெற்ற வேளாண் துறை உயர் அதிகாரி அக்ரி ராஜ்குமார்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள மணல் குன்று பகுதியைச் சேர்ந்தவர் அக்ரி ராஜ்குமார். தூத்துக்குடி மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். பணிக்காலத்திலேயே விடுமுறை நாட்களில் குமரி மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை வழி வேளாண்மை குறித்து இலவச பயிற்சி கொடுத்தவர். பணி ஓய்வுக்கு பின்னர் அதையே முழுநேரமாக செய்து வருகிறார்.
17 நூல்கள்
வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் உள்ளிட்ட 17 நூல்களை எழுதியுள்ளார். `தி இந்து’விடம், அக்ரி.ராஜ்குமார் கூறியதாவது:
பூச்சிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகள். இன்னொன்று தீமை செய்யும் பூச்சிகள். தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பாரம்பரியமாக நம்மிடம் நிறையவே அறிவு இருந்தது. ஆனால், பூச்சிக்கொல்லி என்னும் பெயரில் வயல்களில் அள்ளித் தெளிப்பது, நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழித்து விடுகிறது.
நம் நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை அதிக அளவில் பயன்படுத்த துவங்கியிருந்தோம். 1986-ம் ஆண்டு கும்பகோணத்தில் இயற்கை விவசாய பயிற்சி நடைபெற்றது. அதில் துறை ரீதியாக கலந்து கொள்ள என்னையும் அனுப்பியிருந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் அங்கு பயிற்சி கொடுத்தார்கள். அது விவசாயத்தில் எனக்கு ஒரு திருப்பு முனையாக மாறியது.
பணி புரிந்த இடங்களில் விவசாயிகளுக்கு கூடுமானவரை இயற்கை நுட்பங்களை கற்றுக் கொடுத்தேன். விடுமுறை நாட்களில் பல தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து இயற்கை விவசாய பயிற்சியை இலவசமாக கொடுக்கத் தொடங்கினேன். ஓய்வுக்கு பின்னர் முழு நேரத்தையும் இதற்கென ஒதுக்கி இயங்கிக் கொண்டிருக்கிறேன்.
ஆயிரம் பயிற்சி வகுப்புகள்
ஜப்பான் மேதை மாசானோ புகாக்கோ, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பாலேக்கர், சத்தியமங்கலம் சுந்தர்ராமன், புளியங்குடி அந்தோணிசாமி என இயற்கை விவசாயத்தில் என்னை ஈர்த்த மனிதர்கள் அதிகம். இதுவரை 1,000க்கும் மேற்பட்ட இலவச பயிற்சிகள் கொடுத்திருக்கிறோம். இதன் பலன் நூற்றுக்கணக்கானோர் வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைத்துள்ளனர். பலர் இயற்கை வழி வேளாண்மைக்கு திரும்பியுள்ளனர்.
எனது இந்த முயற்சிகளுக்கு என் மனைவி சாந்தி உள்ளிட்ட மொத்த குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர். ஒவ்வொரு நொடியும் நம்மை வாழ வைக்கும் இயற்கைக்கு என்னால் முடிந்த சிறு நன்றியாக இதை கருதுகிறேன்” என்றார்.