Published : 19 Jan 2017 08:14 AM
Last Updated : 19 Jan 2017 08:14 AM

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தொடரும் போராட்டம்: மெரினாவில் 50 ஆயிரம் பேர் திரண்டனர்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும், இதற்காக முதல்வரும், தமிழக எம்பிக்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் தொடங்கிய போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு நேற்று மெரினா கடற்கரையில் குவிந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் நேற்று முன்தினம் இரவு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன் ஆகியோர் பேச்சு நடத்தினர். ஆனால் அதில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் நேற்று மதியம் பேச்சு நடத்தினார். அரசுடன் பேச்சு நடத்த பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்காத இளைஞர்கள், ‘முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் வந்து எங்களுடன் பேச்சு நடத்த வேண்டும்’ என முழக்கங்களை எழுப்பினர்.

பல்லாயிரக்கணக்கான மாணவர் கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் திரண்டதால் மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நடிகர்கள் லாரன்ஸ், மன்சூர் அலிகான், சிவகார்த்திகேயன், மயில்சாமி ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவர்களும் மாணவர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

கடற்கரை சாலையில் போக்கு வரத்துக்கு இடையூறு ஏற்படாத வகை யில் மாணவர்களே மனிதச் சங்கிலி அமைத்து போராட்டக்காரர்களை சாலையின் குறுக்கே வராதவாறு பார்த்துக் கொண்டனர். ஆனாலும் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க, வாக னங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உணவு பொட்டலங்கள்

மாலை 4 மணிக்குப் பிறகு கடற்கரைக்கு பேருந்துகள், வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டன. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்களில் மெரினா கடற்கரை நோக்கி மாணவர்கள், இளைஞர்கள் அணிஅணியாக திரண்டனர். பேருந்துகளின் மேற்கூரைகளில் ஏறியும் மாணவர்கள் பயணித்தனர். இதனால் மாநகரம் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு குடிநீர் பாக்கெட்கள், பிஸ்கெட்கள், உணவு பொட்டலங்களை தன்னார்வலர்கள் வழங்கினர்.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சாலை மறியல், மனிதச் சங்கிலி, பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ராஜீவ் காந்தி சாலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

போலீஸ் தடியடி

பழைய மாமல்லபுரம் சாலையில் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகே கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சாலை ஓரத்தில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை 11 மணியளவில் தொடங்கிய மறியல் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது. இதனால் பழைய மாமல்லபுரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து போலீஸார் தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். தடியடியில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனிருந்தவர்கள் மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டம் காரணமாக சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முதல்வருடன் பேச்சுவார்த்தை

ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினர் நேற்று இரவு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர். பின்னர் முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக நேற்று இரவு அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என்னை சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம் நான் சில விளக்கங்களை அளித்தேன். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உரிய நியாயம் கிடைக்க வழி வகை செய்யப்படும். பிரதமரை சந்திக்கும்போது தமிழர்களின் உணர்வுகளை எடுத்துக்கூறி இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர வலியுறுத்துவோம். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x