அரசியல் காரணங்களுக்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்: நத்தம் விஸ்வநாதன் வழக்கில் நீதிபதி கண்டிப்பு

அரசியல் காரணங்களுக்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்: நத்தம் விஸ்வநாதன் வழக்கில் நீதிபதி கண்டிப்பு
Updated on
1 min read

அரசியலுக்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வ பணிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முன்ஜாமீன் வழக்கு விசாரணையின்போது நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த வழக்கில் நத்தம் விஸ்வநாதனைக் கைதுசெய்ய ஒருநாள் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தில் ரூ. 2,97,90,700-ஐ திரும்பத் தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல் ஒன்றிய அதிமுக இளைஞரணி துணைச் செயலர் ஏ. சபாபதி திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இவரது புகாரின்பேரில் போலீஸார் கொலை மிரட்டல், மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் விஸ்வநாதன் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி விஸ்வநாதன், உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெ.நிஷாபானு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நத்தம் விஸ்வநாதன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.செல்லப்பாண்டியன் வாதிடும்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு ரூ.70 லட்சம் வரை தான் செலவு செய்ய வேண்டும் என்றுள்ளது. ஆனால், மனுதாரர் தேர்தல் செலவுக்காக ரூ.4 கோடிக்கும் மேல் வழங்கியதாக தெரிவித்துள்ளார். இதிலிருந்து அவரது புகார் பொய்யானது என்பது தெரிகிறது என்றார்.

புகார்தாரர் சபாபதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, இந்த வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளோம். இதனால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 2014-ல் மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போதெல்லாமல் புகார் அளிக்காமல், இப்போது புகார் அளித்து நேரத்தை வீணடிக்கிறீர்கள். அரசியல் காரணங்களுக்காக நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வ பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். பின்னர், விசாரணையை இன்றைக்கு (மார்ச் 15) நீதிபதி ஒத்தி வைத்தார். அதுவரை நத்தம் விஸ்வநாதனை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in