

பிஹார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் பேசியதாவது:
ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். 14 வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்த கருணாநிதி, தனது எழுத்து, திரைப்பட வசனங்கள் மூலம் இளைஞர்களிடம் புரட்சிகரமான கருத்துகளை விதைத்தார். மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
1957-ல் தமிழக சட்டப்பேரவை உறுப்பினரான அவர், 60 ஆண்டுகள் கடந்து இப்போதும் எம்எல்ஏவாக இருக்கிறார். 5 முறை முதல்வர், 50 ஆண்டுகளாக திமுக தலைவர் என வரலாறு படைத்துள்ளார். அகில இந்திய அளவில் இந்த அளவுக்கு அரசியல் அனுபவம் கொண்ட தலைவர் யாரும் இல்லை. அவரது இந்த வரலாற்றுச் சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது என நினைக்கிறேன்.
அவர் முதல்வராக இருந்தபோது விதவைகள் மறுவாழ்வு திட்டம், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என எண்ணற்ற சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றினார். இந்தியாவிலேயே முதல்முறையாக மகளிர் சுயஉதவிக் குழுக்களை ஏற்படுத்தினார். வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 28 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார். இதற்கு காரணமாக இருந்தவர் கருணாநிதி. சமூக நீதிக்காக எப்போதும் குரல் கொடுத்து வருபவர் அவர்.
திமுக, இந்தியாவில் மிகவும் பலம் வாய்ந்த கட்சி. பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிய கட்சி. பிஹாரில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பிஹாரைப்போல தமிழகத்திலும் முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. மதுவிலக்கால் பிஹாரில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. சாலை விபத்துகளும் குற்றங்களும் வெகுவாக குறைந்துள்ளன.
ஸ்டாலின் மீது நம்பிக்கை
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் அனுபவம் பெற்ற தலைவர். அவர் தமிழக முதல்வராக வருவார் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அப்படி அவர் முதல்வராக வரும்போது தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, உமர் அப்துல்லா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கருணாநிதியை வாழ்த்துவதற்காக தலைவர்கள் வந்துள்ளனர். இந்தியாவில் அனைவராலும் மதிக்கப்படும் மகத்தான தலைவர் கருணாநிதி என்பதை உணர முடிகிறது.
இவ்வாறு நிதிஷ்குமார் பேசினார்.