Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

புகையிலைக்கு எதிராக போராடும் 6-ம் வகுப்பு மாணவன்

நல்லது எது, கெட்டது எது என்று தெரியாத பள்ளிப் பருவம். இந்த வயதில் சமூக அக்கறையும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் மாணவர்களிடம் ஏற்படுவது பெரிய விஷயம்தான். வீட்டில் அப்பா, அண்ணன், நெருங்கிய உறவினர்கள் யாராவது புகை பிடித்தால் அதை அருவருப்பாக பார்ப்பார்கள். இந்தப் பழக்கத்தில் இருந்து அவர்கள் மீள மாட்டார்களா என நினைப்பார்கள். குடும்பத்தினர், உறவினர்களோடு நிற்காமல் இந்த சமூகமே புகைப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று போராடுவதால் மற்ற மாணவர்களிடம் இருந்து வித்தியாசப்படுகிறார் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும் ஆறாம் வகுப்பு மாணவர் கிருஷ்ண பாரதி.

வள்ளுவர் கோட்டத்தில் நடந்த 3-வது இளைஞர் நல விழாவில் புகையிலைக்கு எதிராக 60 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றுள் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்தது சிறுவன் கிருஷ்ண பாரதியின் அரங்கு.

‘புகையிலை ஒழிப்போம்; புற்றுநோயில் இருந்து விடுபடுவோம்’ என்ற வாசகங்கள் கொண்ட அட்டைகளை கையில் ஏந்தியபடி, சக மாணவர்களுடன் அரங்கில் கிருஷ்ண பாரதி நின்றிருந்த காட்சி, அனைவரையும் ஈர்த்தது. புகையிலையால் ஏற்படும் தீங்குகள் குறித்து அந்தச் சிறுவன் விளக்கியதை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.

இந்தச் சிறிய வயதில் புகையிலைக்கு எதிராக போராடும் எண்ணம் எப்படி வந்தது என கேட்டபோது மாணவர் கிருஷ்ண பாரதியிடம் கூறியதாவது:

எங்க தாத்தாவுக்கும் பாட்டிக்கும் வெத்தல, பாக்கு, புகையில போடுற பழக்கம் இருந்துச்சு. திடீர்னு பாட்டி செத்துட்டாங்க. புகையில போட்டதால பாட்டிக்கு புத்துநோய் வந்துடுச்சுனு சொன்னாங்க. தாத்தாவுக்கும் ஆஸ்துமா நோய் வந்துடுச்சு. கொஞ்ச நாள்ல அவரும் செத்துட்டாரு.

இதனால அப்பாவுக்கும் வீட்ல இருந்தவங்களுக்கும் ரொம்ப கஷ்டமா போச்சு. தாத்தா, பாட்டிக்கு ஏற்பட்ட நிலமை வேற யாருக்கும் நடக்கக் கூடாதுன்னு அப்பா அடிக்கடி சொல்வாரு. இதுக்காகவே பெசன்ட் நகர் சமூக நலக் குழு என்ற பேர்ல அப்பா ஒரு அமைப்பு தொடங்குனாங்க. அப்ப நான் நாலாவது படிச்சிட்டு இருந்தேன். அப்பவே அப்பாகூட சேர்ந்து புகையிலை பழக்கத்துக்கு எதிரா பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சிட்டேன். பெரியவங்க சொல்றதைவிட என்னை மாதிரி சின்னப் பசங்க சொன்னா ஏத்துப்பாங்கன்னு அப்பா சொன்னாரு. அதனால அந்தப் பகுதியில இருக்கற மத்த ஸ்டூடன்ட்ஸையும் அமைப்புல சேர்த்துக்கிட்டோம். முதல்கட்டமா வீட்டுக்கு பக்கத்துல இருந்த குடியிருப்புகளுக்கு போய் பிரச்சாரம் செஞ்சோம்.

ஞாயிற்றுக்கிழமை அப்புறம் லீவு நாள்ல எங்க அமைப்புல இருக்கற 60 ஸ்டூடன்ட்ஸ் சேர்ந்து ‘புகையிலை ஒழிப்போம்; புற்றுநோய் தவிர்ப்போம்’னு கோஷம் போட்டபடி பல இடங்களுக்கு ஊர்வலமா போவோம். புகை பிடிக்கற வங்ககிட்ட போய், ‘சிகரெட் நல்லதா, கெட்டதா’ன்னு கேட்போம். சிலபேரு நல்லதுன்னு சொல்வாங்க. அப்போ உங்க மனைவி, குழந்தைக்கும் சிகரெட் வாங்கிக் குடுங்கன்னு சொல்வோம்.

எதிர்காலத்துல படிச்சு பெரிய அதிகாரியாகி, சிகரெட், பாக்கு, புகையிலை விக்குற கடைக்காரங்க மேல நடவடிக்கை எடுப்பேன். சின்னஞ்சிறு கண்களில் பெரிய நம்பிக்கை ஒளியுடன் பேசினார் மாணவர் கிருஷ்ண பாரதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x