

சென்னை மாநகராட்சி சார்பில் திறக்கப்பட உள்ள அம்மா வாரச் சந்தையில் இதுவரை 114 கடைகளை திறக்க பல்வேறு அரசுத் துறைகள் மாநகராட்சிக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நகரப் பகுதிகளில் வாழும் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் விலையை விட குறைந்த விலையில், தரமான பொருட்களை வாங்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்களுக்கு தேவையான எல்லாவிதமான பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கவும், சென்னை மாநகராட்சி சார்பில் ‘அம்மா வாரச் சந்தை’ திறக்கப்படும் என்று கடந்த 2014-15 மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார்.
இதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
இத்திட்டத்தை செயல்படுத்து வதற்காக மாநகராட்சி பூங்கா கண்காணிப்பாளராக உள்ள ஜெயபால் ஒருங்கிணைப்பு அலுவ லராக நியமிக்கப் பட்டுள்ளார்.
7 இடங்கள் தேர்வு
வாரத்துக்கு ஒரு நாள் வீதம், 7 நாட்களும் சென்னையில் அம்மா வாரச் சந்தைகளை திறப்பதற்காக, அரும்பாக்கம் பசுமை தீர்ப்பாய அலுவலகம் அருகில், மின்ட் தங்கசாலை பாலத்தின் கீழ் பகுதி, கோட்டூர்புரம் வரசித்தி விநாயகர் கோயில் அருகில், வளசரவாக்கம் ஆவின் பாலக வளாகம், ராமாபுரம் எஸ்ஆர்எம் ஈஸ்வரி கல்லூரி அருகில், பழைய மகாபலிபுரம் சாலையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம், மெரினா கடற்கரை ஆகிய 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தயார்படுத்தும் பணி
மற்ற 6 இடங்களிலும் கடைகளை உடனே திறக்கும் வகையில் காலி இடம் தயாராக உள்ளன. அரும்பாக்கத்தில் உள்ள இடத்தில் மட்டும் கடைகள் அமைப்பதற்கு ஏற்றவாறு தற்போது இடத்தை சமன்படுத்தி வருகிறோம்.
200 நிறுவனங்களுடன் பேச்சு
ஒவ்வொரு வாரச் சந்தையிலும் 200 கடைகளை திறப்பதற்கான வசதிகளை செய்ய உள்ளோம். அங்கு கடைகளில் பொருட்களை விற்க வேளாண்மை, தோட்டக்கலை , கரும்பு வளர்ச்சி, பால் வளம், மீன்வளம், கால்நடை, பிற்படுத்தப்பட்டோர் நலம், பட்டு வளர்ச்சி ஆகிய துறைகள், தமிழ்நாடு மூலிகை மருந்து கழகம், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம், மகளிர் மேம்பாட்டு ஆணையம், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் என 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இதுவரை 20-க்கும் மேற்பட்ட துறைகள் மற்றும் அரசுசார் நிறுவனங்கள் 114 கடைகளில் பொருட்களை விற்பனை செய்வதற்கு வணிகர் களை ஏற்பாடு செய்து அனுப்புவதாக ஒப்புக் கொண்டுள்ளன. இதில் தோட்டக் கலை துறை சார்பில் 24 கடைகள் வைக்கப்பட உள்ளன.
1256 பொருட்கள் விற்பனை
இந்த சந்தையில் காய்கறி, பழம், மளிகைப் பொருள், அரிசி வகைகள் மற்றும் அவற்றில் இருந்து மதிப்பு கூட்டு முறையில் தயாரிக்கப்பட்ட அவல், பொரி, சோளம் மற்றும் அதில் இருந்து தயாரிக்கப்பட்ட சோளப் பொரி, சோள மாவு, சோள ரவை மற்றும் சமையல் பாத்திரங்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கோழி மற்றும் ஆட்டு இறைச்சி, மீன் என மொத்தம் 1,256 பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
விளம்பரம் மூலம் வருவாய்
இந்த சந்தைகளில் தலா 100 சதுர அடி பரப்பளவில் ஒவ்வொரு கடையும் அமைக்கப்பட உள்ளன. கடைகளுக்கான தடுப்புகள், மேற்கூரை அமைத்தல், மின்சாரம், விளக்கு, மின்விசிறி போன்ற வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக் கப்பட உள்ளன. அதற்கான செலவை ஈடுகட்ட, அந்த சந்தை களில் பெரு வணிக நிறுவனங்கள் விளம்பரங்கள் செய்ய அனுமதிக் கப்படும். அதற்கான கட்டணங் களும் நிர்ணயிக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.