Last Updated : 23 Sep, 2013 09:23 AM

 

Published : 23 Sep 2013 09:23 AM
Last Updated : 23 Sep 2013 09:23 AM

சென்னையை ஆட்டிப்படைக்கும் ஆட்டோ பிரச்சினை

சென்னையில் ஆட்டோ மீட்டர் பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. சென்னையைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு ஆட்டோ தொடர்பான கசப்பான அனுபவம் இல்லாமல் இருக்காது. இன்றைய தலைமுறையினர் நினைவு தெரிந்த நாள் முதல் ஆட்டோக்களில் மீட்டர் பயன்பாட்டை பார்த்தே இருக்க மாட்டார்கள். (2007-ம் ஆண்டு, அரசின் கட்டாயத்தின் பேரில் சில மாதங்களுக்கு மட்டும் மீட்டர் போட்டு ஓட்டப்பட்டது).

ஆட்டோக்களில் மீட்டர் போடப்படுவதில்லை, அதிக கட்டணம் வசூலிக்கின்றனர், மரியாதை குறைவாக பேசுகிறார்கள் என்பது போன்ற புகார்கள் புதிது அல்ல.

பஸ் பிரச்சினை

சென்னை மாநகரில் காலம் காலமாக இருந்து வரும் பொது போக்குவரத்தில் சேவைக் குறைபாடு இருப்பதால் ஆட்டோக்கள் சென்னை நகரின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டது. சென்னை நகரத்துக்கு குறைந்தது 1500 பஸ்களாவது கூடுதலாக வேண்டும்.

60 முதல் 71,000 வரை...

1960-களில் சென்னையில் வெறும் 60 ஆட்டோக்கள்தான் ஓடிக் கொண்டிருந்தன. இன்றோ 71 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. பிரதான சாலைகளில் இருந்து தொலைவில் அமைந்திருக்கக் கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஆட்டோக்களை நம்பி உள்ளனர். ‘வருகிறது..வருகிறது.. என்று சொல்லப்படும் மினி பஸ் வந்தபாடாக இல்லை. பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் ஆட்டோ பயன்பாடு பெரிதும் குறையும்’ என்கிறார், எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த மூத்த நிர்வாகி அயன்புரம் கே.ராமதாஸ்.

போலீஸ் ஆட்டோ?

கடந்த 1990-களில் பெரும்பாலான ஆட்டோக்கள், போலீசாருக்கும், அரசியல்வாதிகளுக்குமே சொந்தமாக இருந்தன. காலப்போக்கில், கணிசமான ஆட்டோக்கள் பைனான்சியர்கள் வசம் சென்றுவிட்டன. இன்றும், பல ஆட்டோ ஓட்டுனர்களின் பெர்மிட்டுகள் பைனான்சியர்கள் வசம் உள்ளதால், போக்குவரத்துத் துறை விநியோகிக்கும் புதிய ஆட்டோ மீட்டர் கட்டண அட்டையை பெறமுடியாமல், பல ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை இயக்காமல் இருந்து வருகின்றனர்.

20 ஆயிரம் ஆட்டோக்கள் இதுவரை அந்த அட்டைகளைப் பெறவில்லை. முறையான ஆவணம் இல்லாத 600-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது முற்றுப்பெறாத பிரச்சினையாக தொடர்கிறது.

பெங்களூர்வாசியின் புது அனுபவம்

சென்னையில் போக்குவரத்துத் துறையும், போலீசாரும் புதிய ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அமல்படுத்த சமீபத்தில் முழுமூச்சாக களம் இறங்கியதற்குப் பிறகு கடந்த சில நாள்களாக ஓரிரு ஓட்டுநர்களேனும் மீட்டரை போட்டு ஓட்டி வருகிறார்கள்.

பெங்களூரில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை வந்திருந்த தனியார் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் எஸ். செந்தில்குமார் கூறுகையில், "புரசைவாக்கத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் வரை செல்ல ஆட்டோவை அழைத்து அதில் ஏறியவுடன், கட்டணத்தைப் பற்றி கேட்டபோது, "மீட்டர் போடுறேன் பார்த்துக் கொடுங்க" என்றார். நான் போக வேண்டிய இடத்துக்கு ரூ.76-தான் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த மாற்றத்துக்கு போலீசார்-போக்குவரத்துத் துறையின் தீவிர கண்காணிப்பே காரணம் என்பது பின்னர் தெரியவந்தது. இது தொடர வேண்டும் என்றார்.

மும்பை போல்....

இதுஒரு புறம் இருக்க, ஆட்டோ டிரைவர்களும் தங்களது குறைகளை எடுத்துக் கூறினர். மும்பையில் உள்ளதுபோல் சென்னையிலும், எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்டணத்தை அவ்வப்போது மாற்றி அமைக்கும் முத்தரப்பு கமிட்டியை அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிய மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது முதல் பெட்ரோல் கட்டணம் இருமுறை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே, பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்கும் குழுவை அமைத்து நியாயமாக கட்டணம் அவ்வப்போது மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.

பயணிகளோ, இவர்களது ஒப்புதலோடு மீட்டர் கட்டணத்தை அரசு நிர்ணயித்த பிறகு, அதை கண்டிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டும் என்கிறார்கள்.

என்ன சொல்கிறார்கள் ஓட்டுநர் - பொது மக்கள்?

சென்னையில் பொதுமக்களும் ஆட்டோ ஓட்டுநர்களும் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

எம். சந்திரசேகர் , அடையார்

அடையாரிலிருந்து விமான நிலையத்துக்கு செல்ல ரூ.200 வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது ரூ.120 தான் வாங்குகிறோம். திரும்பி வரும் போது எங்களுக்கு சவாரி கிடைப்பதில்லை. பெட்ரோல் விலையும் ஏறிக் கொண்டிருக்கிறது. இதற்கேற்றவாறு அரசு கட்டணத்தை உயர்த்துவதில்லை. புது மீட்டர் பிப்ரவரி மாதம் வரும் என்று கூறியிருக்கிறார்கள். பழைய மீட்டரை சரி செய்ய சென்றால் மிகவும் தாமதாகிறது.

ஜி.ஷங்கர், சென்ட்ரல் ரயில் நிலையம்

மீட்டர் போடுவதால் யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால் மக்களுக்கு மீட்டரைப் பற்றிய முழு விவரம் தெரியவில்லை. ஆட்டோ சிக்னலில் நின்றால் மீட்டர் வெயிட்டிங் சார்ஜ் காட்டும். ஆனால், நின்று கொண்டிருக்கும் வண்டியில் மீட்டர் ஓடுவதைப் பார்க்கும் பயணிகள் நாங்கள் அவர்களை ஏமாற்றுவதாக கருதுகின்றனர்.

பி.கலா, மீன் வியாபாரி

மீட்டர் போட்டது நல்லது தான். ஆனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இது குறைந்த கட்டணமாக இருக்கும். ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியை அவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள்? எனவே அரசு பெட்ரோல் விலையை குறைத்தால்தான் இரு தரப்பினருக்கும் நன்மை.

ஆர். அஜித், கல்லூரி மாணவர்

அரசின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. முதலில் ஆட்டோவில் ஏறினால் என்ன கட்டணம் கேட்பார்களோ என்று பயமாக இருக்கும். இனி நம்பி ஏறலாம். சில ஆட்டோக்களில் தமிழக அரசு கொடுத்திருக்கும் கட்டணத்தை ஒட்டி வைத்திருக்கின்றனர். இதையும் தாண்டி பிரச்சினை வந்தால் புகார் அளிக்க கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணை குறித்து வைத்துள்ளேன்.

எஸ். ராஜகோபாலன், ஓய்வு பெற்ற அதிகாரி

முன்பு சின்மயா நகரிலிருந்து தி.நகர் வருவதற்கு ரூ.200 கேட்டனர். ஆனால் இப்போது ரூ.98 தான் ஆகிறது. எனவே மீட்டர் போடச் சொல்வது வரவேற்கப்பட வேண்டியதுதான். இது திருச்சி போன்ற மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பெங்களூருவில் இருப்பது போல் மானிய விலையில் காஸ் ஆட்டோக்களை ஓட்ட வைக்கலாம்.

ரோசிட்ஸா, பல்கேரியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி

நான் சென்னை ஆட்டோக்களில் பயணம் செய்துள்ளேன். என்னை பார்த்தவுடன் வெளிநாட்டவர் என்று தெரிவதால் என்னிடம் அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றனர். மீட்டர் முறை சரியாக அமுல்படுத்தப்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

ஷ்யாமலா ஆதிலக்ஷ்மி, தகவல் தொழில்நுட்ப நிபுணர்

அலுவலக வண்டியை விட்டுவிட்டால் ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் அவர்கள் கேட்பது அதிகமாக இருந்தாலும் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும். அவர்களிடம் பேரம் பேசவே முடியாது. மீட்டர் முறை சென்னையின் புறநகரிலும் சரியாக அமல்படுத்தப்பட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்.

கடந்த சில மாதங்களாக சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்களை ஆட்டிப் படைத்து வரும் பிரச்சினை ஆட்டோ மீட்டர். புதிய கட்டண விகிதங்களை அரசு நிர்ணயித்த பிறகு அதை நடைமுறைப்படுத்த திடீர் சோதனைகளை போக்குவரத்துத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x