

“தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் போதிய கவனம் செலுத்தவில்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம் சாட்டியுள்ளார்.
சங்கரன்கோவிலில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கை அரசு 5 மீனவர்களை தூக்கு தண்டனையில் இருந்து விடுவித்தது வரவேற்கத்தக்கது. கிரானைட் மற்றும் தாது மணல் ஊழலை விசாரிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழுவை முடக்க தமிழக அரசு முயற்சிக்க கூடாது.
கைது செய்ய வேண்டும்
தமிழகம் முழுவதும் சகாயம் குழு கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க வேண்டும். அதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்ட ராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவர்களை காவல் துறை கைது செய்து சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
ஊழல் பிரச்சினைகளை தடுக்கும் வகையில் உயர்மட்ட அளவில் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும். அரசின் உதவி திட்டங்களை பெறவும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் கீழ்மட்டத்தில் லஞ்சம் மற்றும் கையூட்டு தலை விரித்தாடுகிறது. இதை தடுக்க குடிமக்கள் சாசனத்தை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் கவுரவ கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்.
திணிக்கக் கூடாது
வேறுசாதி பெண்ணை காதலித் தார் என்ற குற்றத்துக்காக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரத்தில் முத்துகுமார் என்ற இளைஞர் படுகொலை செய்யப் பட்டுள்ளார். அந்த படுகொலைக்கு காரணமானவர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும்.
பால் விலை உயர்வு, உத்தேச மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். புதிதாக மின் உற்பத்திக்கு என்ன வழி என்று யோசிக்க வேண்டுமே தவிர மக்கள் மீது கட்டண உயர்வை திணிக்கக் கூடாது.
நெல்லை மாவட்டத்தில் 25 நாட் களில் 30 கொலைகள் நடந்துள்ளன. கூலிப்படையின் கைவரிசை அதிகரித்துள்ளது. தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் போதிய கவனம் செலுத்தவில்லை.
பேச்சு ஒன்று; செயல் வேறு
விவசாயிகள் வறட்சி மற்றும் பேரழிவை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு தரும் குறைந்த நிவாரணங்கள் போதுமானதாக இல்லை. இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும். முதியோர் உதவித் தொகை திடீரென நிறுத் தப்பட்டுள்ளது. தகுதி உள்ள முதி யோருக்கு உதவித் தொகையை வழங்க வேண்டும்.
பிரதமர் மோடியின் பேச்சு ஒன்று, செயல் வேறு மாதிரியாக உள்ளது. தொழிலாளர் நல சட்டங்கள், தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டு முதலாளிகளுக்கு சாதகமான அம்சத்தை அரசா ணையில் புகுத்தியுள்ளார்.
சமையல் எரிவாயு மானிய பணத்தை மக்களின் பெயரில் வங்கி கணக்கில் போடுவது என்பது பிரச்சினைக்கு தீர்வாகாது. மாறாக பிரச்சினைதான் அதிகரிக்கும். இடதுசாரிக் கட்சிகள் இணைந்து டிசம்பர் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்று வாசுகி தெரிவித்தார்.