கர்நாடக வன்முறையை கண்டித்து தமிழகத்தில் நாளை நடக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு கட்சிகள் ஆதரவு: பேருந்துகளை இயக்க அரசு ஏற்பாடு

கர்நாடக வன்முறையை கண்டித்து தமிழகத்தில் நாளை நடக்கும் கடையடைப்பு போராட்டத்துக்கு கட்சிகள் ஆதரவு: பேருந்துகளை இயக்க அரசு ஏற்பாடு
Updated on
2 min read

கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப் பட்டதைக் கண்டித்து விவசாயிகள், வணிகர்கள் நாளை நடத்தவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் பேருந்துகளை வழக்கம்போல இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத் தியும், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித் தும் தமிழகம் முழுவதும் நாளை (16-ம் தேதி) முழு கடையடைப்பு, ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா, ஈரோடு தெய்வசிகாமணி தலைமையிலான தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டியக்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக, பாமக, தமாகா, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்றும் போராட்டத்தில் திமுக தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தி.க. தலைவர் கி.வீரமணி, இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட் டோரும் கடையடைப்பு போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்கள் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் பங்கேற்பர் என்றும் அறிவித்துள்ளனர். கோயம்பேட்டில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிகவும், ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அறிவித்துள்ளன.

‘தமிழகம் முழுவதும் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சுமார் ஒன்றரை லட்சம் முகவர்களும் தங்களது பால் விற்பனை நிலையங்களையும், விநியோக மையங்களையும் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மட்டும் அடைத்து போராட்டத்தில் கலந்துகொள்வர்’ என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி அறிவித்துள்ளார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

கடையடைப்பு, ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 90 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத் தப்பட உள்ளனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. ‘கடைகளை அடைக்கச் சொல்லி யாரையும் வற்புறுத்தக் கூடாது. வன்முறையில் ஈடுபடு பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்’ என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

ரயில், பேருந்துகள் ஓடும்

அரசு போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடையடைப்பு போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து பாதிக் காது. தமிழகம் முழுவதும் உள்ள 22 ஆயிரம் அரசு பேருந்து களையும் இயக்க உரிய ஏற்பாடுகள் செய்துள்ளோம். போலீஸ் பாதுகாப்பும் கேட்டுள் ளோம்’’ என்றார்

தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சில இடங் களில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள் ளனர். அதனால், ரயில் சேவை பாதிக்காது. பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸாரிடம் கேட்டுள்ளோம்’’ என்றார்.

பள்ளிகளில் தேர்வு நடக்கும்

தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. முழு அடைப்புப் போராட்டம் காரணமாக 16-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப் படுமா என்று பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இதுகுறித்து அரசிடம் இருந்து எந்த உத்த ரவும் வரவில்லை. அதனால், திட்ட மிட்டபடி தேர்வு நடக்கும்’’ என்றார்.

காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி நாளை (செப்.16) நடத்தப்படும் பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனையாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இது தொடர்பாக தமிழக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் எம்.ஹைதர் அலி கூறுகையில், ‘‘சங்க தலைவர் கே.பி.முரளி தலைமையில் நடந்த அவசர நிர்வாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களையும் 16-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இயக்குவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in