

பொது விநியோகத் திட்டத்தில் பழைய குடும்ப அட்டைக்கு பதில் புதிய ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கு 15 லட்சம் அட்டைகள் அனுப்பப் பட்டுள்ளன.
தமிழகத்தில் 1.89 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ‘ஸ்மார்ட் கார்டு’ எனப்படும் மின்னணு குடும்ப அட்டை வழங்கப் பட உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை அடுத்த பாடியில் நடக்கும் நிகழ்ச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், நாடாளு மன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்கின் றனர்.
அடுத்த 2 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்க உணவுத் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.
இது தொடர்பாக, உணவுத் துறை செயலர் பிரதீப் யாதவ் கூறியதாவது:
குடும்ப அட்டைகளில் ஆதார் எண் இணைக்கும் பணி 99 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டது. இதில் 1.25 கோடி குடும்ப அட்டைகளில் குடும்ப உறுப்பினர்கள் அனை வரின் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டுள்ளன. 62 லட்சம் குடும்ப அட்டைகளில் குடும்பத் தில் ஒரு நபரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. ஒருவர் இணைத்திருந்தாலும் அவர் களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குகிறோம். 60 லட்சத்துக்கும் மேலான அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சென்னை யில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் 15-ம் தேதிக்குப்பின் அட்டைகள் வழங்கப்படும்.
15 லட்சம் அட்டைகள்
சென்னை தவிர மற்ற பகுதி களில் விநியோகிக்க 15 லட்சம் அட்டைகள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தினசரி 5 லட்சம் அட்டைகள் அச்சடிக்கப் பட்டு வருகின்றன. 1.87 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.70 கோடி பேர் கைபேசி எண்ணை இணைத்துள்ளனர். இந்த எண் ணுக்கு அட்டை தயாரிக்கப் பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வரும். அதைக் காட்டி சம்பந்தப் பட்ட பகுதியில் பெற்றுக் கொள்ளலாம். எனவே, யாரும் அவசரப்பட வேண்டாம். மின்னணு குடும்ப அட்டையில் பொருட்களை வாங்கா விட்டாலும் ரத்து செய்யப்படாது. குறிப்பிட்ட காலத்துக்குப் பின், கள ஆய்வு செய்யப்பட்டு, காரணங்கள் கண்டறியப்படும்.
திருத்தங்கள்
புதிய மின்னணு குடும்ப அட்டை யில் திருத்தம் செய்வது மிகவும் எளிது. வட்டார வழங்கல், உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு இனி செல்ல வேண்டியதில்லை. புகைப்படம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றை, உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை இணையதளத்தில், ‘கன்ஸ்யூமர் லாகின்’ பகுதியில் சென்று, கைபேசி எண்ணை பதிவு செய்து, திருத்தம் மேற்கொள்ள லாம். சில திருத்தங்களில் மட்டும், உணவுத் துறையின் அனுமதி தேவைப்படும். உடனுக்குடன் அனுமதி அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
புதிய குடும்ப அட்டை வேண்டுவோர், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கள ஆய்வு முடித்து 7 நாட்களில் புதிய அட்டை பெற்றுக்கொள் ளலாம். கைபேசி எண்ணை மாற்றவும், சந்தேகங்களை தீர்க் கவும் ‘1967’ மற்றும் 18004255901’ என்ற இலவச எண்களை தொடர்பு கொள்ளலாம். திருத்தம் செய்யப் பட்ட பின், புதிய அட்டைகளை அரசு இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உளுந்து விநியோகம் நிறுத்தம்!
சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஒரு கிலோ உளுந்து, ஒரு கிலோ துவரம் பருப்பு ஆகியவை தலா ரூ.30-க்கும், ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் வழங்கப்பட்டது. இதில் தற்போது உளுந்து நிறுத்தப்பட்டுவிட்டது. இது தொடர்பாக உணவுத் துறையினர் கூறும்போது, ‘‘துவரம் பருப்பு 60 சதவீதமும், உளுந்து 40 சதவீதமும் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. ரேஷன் கடைகளில் உளுந்தை வழங்குவதில் முறைகேடு நடப்பதால், 100 சதவீதமும் துவரம் பருப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டு, 20 ஆயிரம் டன் துவரம் பருப்பு மட்டுமே தற்போது கொள்முதல் செய்யப்படுகிறது’’ என்றார்.