Last Updated : 13 Sep, 2015 07:29 PM

 

Published : 13 Sep 2015 07:29 PM
Last Updated : 13 Sep 2015 07:29 PM

எலும்புகள் தோண்டியெடுப்பு: மயானத்தில் விடிய விடிய முகாமிட்ட சகாயம்

பி.ஆர்.பி. நிறுவனம் மீது நரபலி புகார்: நான்கு சடலங்களின் எலும்புகள் தோண்டியெடுப்பு

*

பி.ஆர்.பி. நிறுவனம் மீது நரபலி புகார் கொடுக்கப்பட்ட நிலையில், புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் இருந்து நான்கு பேரின் எலும்புகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் மோசடி நடந்ததாக அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதைத் தொடர்ந்து, அவரையே சட்ட ஆணையராக நியமித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த வாரம், பி.ஆர்.பி. ஏற்றுமதி நிறுவனத்தில் சகாயம் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், மதுரை மாவட்டம் கீழவளவைச் சேர்ந்தவரும், பி.ஆர்.பி. நிறுவன முன்னாள் ஓட்டுநருமான சேவற்கொடியோன் சகாயத்திடம் அளித்த புகாரில், ‘மனநலம் பாதித்த இருவரை பி.ஆர்.பி. நிறுவனத்தினர் நரபலி கொடுத்து சடலங்களை இ.மலம் பட்டி குவாரி அருகே புதைத் துள்ளனர். அந்த இடத்தை அடை யாளம் காட்டத் தயார்’ என்று கூறியிருந்தார்.

அதன்படி மதுரையில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இ.மலம்பட்டி ஊராட்சி சின்னமலம்பட்டி குவாரி அருகே, சேவற்கொடியோன் சுட்டிக்காட்டிய இடத்தில், நேற்று முன்தினம் தோண்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், அரசுத் துறையினரின் போதிய ஒத்து ழைப்பு இல்லாததால், நேற்று முன்தினம் திட்டமிட்டபடி சடலங் களை தோண்டியெடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை 9.15 மணியளவில் தோண்டும் பணி தொடங்கியது.

காலை 10.45 மணியளவில் அந்த இடத்துக்கு சகாயம் நேரில் வந்து ஆலோசனை நடத்தினார். அடுத்த சில நிமிடங்களிலேயே, முதல் சடலம் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தசைகள் முழுவதும் மக்கிவிட்ட நிலையில் எலும்புக்கூடு கிடைத்தது. தனித் தனியாகக் கிடைத்த எலும்புகளை பிளாஸ்டிக் வாளியில் அதிகாரிகள் சேகரித்தனர்.

மயானத்தில் சேகரிக்கப்பட்ட எலும்புகளை ஒப்படைக்கும் தடய அறிவியல் குழுவினர். | படம்: ஆர்.அசோக்

அதே இடத்தில், பகல் 2 மணி அளவில் மேலும் இரண்டு சடலங்களின் எலும்புக்கூடு, மண்டை ஓடுகள் இருப்பது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் சிறு குழந்தையின் எலும்பும் சிக்கிய தால் பரபரப்பு அதிகரித்தது. சடலம் முழுமையாக மக்கிய நிலையில் மண்டையோடு மட்டும் இருந்தது. பின்னர் அவை ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

எலும்புகள் சிக்கி உள்ளதால் கிரானைட் மோசடி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மயானத்திலேயே தூங்கிய சகாயம்

*

நரபலி கொடுக்கப்பட்டு புதைக் கப்பட்டவர்களின் சடலங்களை தோண்டி எடுக்க போலீஸார் ஒத்துழைக்க மறுத்த நிலையில், இ.மலம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சின்னமலம்பட்டி மயானத்தில் சட்ட ஆணையர் உ. சகாயம் நேற்று முன்தினம் இரவு முழுவதும் அங்கேயே முகாமிட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிஆர்பி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மனநலம் பாதிக் கப்பட்டவர்கள் நரபலி கொடுக் கப்பட்டு, சின்ன மலம்பட்டியில் புதைக்கப்பட்டதாக பிஆர்பி நிறுவன முன்னாள் ஓட்டுநர் சேவற்கொடியோன் என்பவர் சகாயத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து, நரபலி கொடுக் கப்பட்டவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி உண்மையை கண்டறிய சகாயம் முடிவு செய்தார். இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும், மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கும் தகவல் அளித்தார்.

இதற்காக, சின்னமலம்பட்டியில் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு சகாயம், அவரது குழுவினருடன் வந்தார். 10 மணியளவில் ஜேசிபி வாகனம் வந்தது. சகாயம் குறிப்பிட்ட இடத்தை ஜேசிபியை வைத்து தோண்டினர். சிறிது மணல் அள்ளப்பட்ட நிலையில் எஸ்பியின் உத்தரவின்பேரில் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

பின்னர் நரபலி மரணம் குறித்து சேவற்கொடியோன் கிராம நிர்வாக அலுவலர் அழகுராஜாவிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரை கோட்டாட்சியர் செந்தில்குமாரி கீழவளவு போலீஸாருக்கு அனுப்பினார். உடனடியாக, அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வளவு நடைபெற்றும் மயானத்துக்கு மருத்துவக்குழு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனை டீன் ரேவதியை தொடர்பு கொண்டு, மருத்துவக்குழு வராதது குறித்து சகாயம் தெரிவித்தார். அதற்கு டீன், தனக்கு போலீஸாரிடம் இருந்து முறைப்படி தகவல் வரவில்லை என்றார். பின்னர் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக்குழு, நேற்று முன்தினம் பகல் 3 மணிக்கு மேலூர் வந்தது. இருப்பினும், அந்தக் குழுவை சின்னமலம்பட்டிக்குள் போலீஸார் உடனடியாக அனுமதிக்கவில்லை. மருத்துவக் குழுவை மேலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், சுமார் 3 மணி நேரம் இருக்கச் செய்து பின்னர் மயானத்துக்கு அனுப்பினர். அவர்களுக்காக சகாயம் அங்கேயே காத்திருந்தார்.

ஆட்சியர் உத்தரவிட்டால்தான் பணிகளை மேற்கொள்வோம் என மருத்துவக் குழு தெரிவித்தது. அதற்கு, நான் உயர் நீதிமன்றம் நியமனம் செய்த சட்ட ஆணையர், நான் எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கிறேன், நீங்கள் பணியை மேற்கொள்ளலாம் என்றார். அதையேற்க மருத்துவக்குழு மறுத்துவிட்டது. இதை டீனிடம் சகாயம் தெரிவித்தார்.

இருள் சூழத் தொடங்கியதால் ஜெனரேட்டர் கொண்டுவந்து விளக்குகளை அமைக்குமாறு வட்டாட்சியரிடம், கிராம நிர்வாக அதிகாரியிடமும் சகாயம் தெரிவித்தார். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் தனியே ஒரு இடத்தில் போய் நின்று கொண்டனர். அவர்களிடம் சகாயம் மீண்டும் கேட்டபோது, ஆட்சியரிடம் கேட்டுத்தான் செய்ய முடியும் என்றனர். பின்னர் போலீஸாரும் அங்கிருந்து செல்லத் தொடங்கினர். சகாயம் குழுவினர் மட்டும் செய்வதறியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில், எந்தவித பாதுகாப்பும் இன்றி மயானத்தில் சகாயம் குழுவினர் நிற்கும் தகவல் வேகமாகப் பரவியது.

இதையடுத்து, அரிட்டா பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஜெனரேட்டருடன் ஆப ரேட்டர் ஒருவரையும் சின்ன மலம்பட்டிக்கு அனுப்பினார். கீழையூரில் அவர்களை வழிமறித்த போலீஸார், ஜெனரேட்டர் பிளக்கை பறித்துக் கொண்டு அனுப்பினர். ஒருவழியாக ஜெனரேட்டர் மயானத்துக்கு வந்து சேர்ந்தது. ஆனால், பிளக் இல்லாததால் ஜெனரேட்டரை இயக்க முடியவில்லை.

இரவு 7 மணிக்கு மதுரை மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதாரி மயானத்துக்கு வந்தார். அவரிடம், போலீஸார் தனக்கு ஒத்துழைக்கவில்லை என சகாயம் பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.

அதற்கு எஸ்பி, போலீஸார் ஒத்துழைப்பு தராமல் இல்லை. இப்போது இருட்டிவிட்டது. காலையில் தோண்டலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். மருத்துவக் குழுவினர், போலீஸார் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

சின்னமலம்பட்டி மயானத்திலேயே இரவில் படுத்து உறங்கிய சட்ட ஆணையர் உ. சகாயம். | படம்: எஸ். ஜேம்ஸ்

இங்கிருந்து சென்றுவிட்டால் இரவோடு இரவாக மயானத்தை தோண்டி சடலங்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என நினைத்த சகாயமும், அவரது குழுவினரும் மயானத்தை விட்டு செல்லாமல் அங்கேயே இருந்து விட்டனர். ஒரு கட்டிலை வரவழைத்து மயானத்திலேயே சகாயம் படுத்துக் கொண்டார். அவரது குழுவினர் காரில் காத்திருந்தனர்.

தன்னார்வ அமைப்பினர் சகாயத்துக்கு ஆதரவு

மயானத்தில் எவ்வித பாதுகாப்பு இல்லாமல் சகாயம் குழுவினர் இருக்கும் தகவல் பரவியதால் பலர் சகாயத்தை தேடி வரத் தொடங்கினர். இரவு 1 மணிக்கு ஆம் ஆத்மி, சட்டப் பஞ்சாயத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மயானத்துக்கு வந்தனர். தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்களும் சகாயத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று காலை விடிந்ததும் சகாயம் குழுவினர் 3 பேர் மயானத்தில் இருக்க சகாயம் மற்றும் இருவர் அங்கிருந்து சென்று குளித்துவிட்டு திரும்பி வந்தனர். அதன்பின் நேற்று காலை 9 மணியளவில், மருத்துவக் குழுவினர் மயானத்துக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து, சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தை ஆட்கள் தோண்டினர். அப்போது அங்கு வந்த சகாயம், சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x