

சமீபத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்ட நோக்கியா ஆலையிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தங்களுக்கு அதிக இழப்பீடு தர வேண்டும் என்று வலியுறுத்தி 5 ஆயிரம் ஊழியர்களை ஒன்றுதிரட்டி போராட முயற்சி செய்து வருகின்றனர்.
2011-ல் உலகிலேயே அதிக செல்போன்கள் தயாரிக்கும் நிறுவனமாக (11 சதவீதம்) விளங்கிய நோக்கியா சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இதனால் பெரும்புதூர் நோக்கியா ஆலை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆலையைத் தொடர்ந்து நடத்தும் என்று நம்பியிருந்தனர்.
ஆனால், பெரும்புதூர் ஆலை தொடங்கப்பட்ட 2006-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரைக்கும் ரூ.21 ஆயிரம் கோடி வரி பாக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்தது. இதனால் பெரும்புதூர் ஆலையை மட்டும் ஏற்க மைக்ரோசாப்ட் மறுத்துவிட்டது.
எனவே பெரும்புதூர் ஆலையை மூட வசதியாக விருப்ப ஓய்வில் செல்வோருக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக நோக்கியா இந்தியா நிறுவனம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேறுவழியின்றி, விருப்பு ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணி அனுபவத்துக்கு ஏற்ப ரூ.3 லட்சம் முதல் ரூ.5.5 லட்சம் வரை வழங்கப்பட்டது. 150 பேர் மட்டும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, விருப்ப ஓய்வு பெற்ற 5 ஆயிரம் பேரில் கணிசமானோர் நேற்று நோக்கியா ஆலை முன்பு திரண்டனர். தங்களுக்கு, இழப்பீடு குறைவாக வழங்கப்பட்டதாகவும், சமீபத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கியதுபோல், தங்களுக்கும் இழப்பீ்ட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஆலையின் வாயிலில் குழுமியிருந்த தொழிலாளர்களில் சிலர் ’தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
குறைந்த வயதில் விஆர்எஸ்
ஸ்ரீபெரும்புதூர் ஆலையை மூட முடிவு செய்த நிர்வாகத்தினர், தொழிலாளர்களின் கூட்டத்தைக் கூட்டி, “விருப்ப ஓய்வுபெற்றுச் செல்வோருக்கு இழப்பீடு வழங்கப்படும். விரைவில், பஸ் சேவை நிறுத்தப்படும், கேன்டீன் செயல்படாது” என்று கூறினர். பஸ் சேவை நிறுத்தப்பட்டால், வேலைக்கு வர முடியாது என்பதால் பெண்கள் ஓய்வு பெற சம்மதித்துவிட்டனர். இதுபோல், வேறு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால் பெரும்பாலான ஆண்களும் விருப்ப ஓய்வுக்கு சம்மதித்தனர்.
எங்களுக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் மூலம் ரூ.5 லட்சம் வரை வழங்கப்பட்டது. ஆனால், எங்களுக்குப் பிறகு விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.9 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நிறுவனம் மீண்டும் செயல்பட்டால், முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதனால், விருப்ப ஓய்வு பெற்ற 5 ஆயிரம் பேரைத் திரட்டி, போராட முடிவெடுத்திருக்கிறோம். அனைவரையும், எஸ்எம்எஸ் தகவல் அனுப்பி ஒன்றுதிரட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. எங்களுக்கும், அதிக இழப்பீடும், நிறுவனம் செயல்படத் தொடங்கினால் வேலையில் முன்னுரிமையும் அளிக்க வேண்டும் என்றனர்.
நிர்வாகம் கருத்து என்ன?
இது குறித்து நோக்கியா இந்தியா நிர்வாகத்தினர் கூறியது:
மே மாதத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு, 2014-க்கான ஊதிய உயர்வு சேர்த்து அளிக்கப்பட்டது. அதன்பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு, 2015-க்கான ஊதிய உயர்வும் சேர்த்து அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே முதல் டிசம்பர் வரை அகவிலைப்படி உயர்ந்துள்ளது. அதுவும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, ‘பிரிட்ஜ் கிரான்ட்’ என்ற நிவாரணத் தொகை, தலா ரூ.1.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால்தான், அவர்களை விட, இவர்கள் அதிக செட்டில்மென்ட் தொகை பெற்றது போலிருக்கும்.
இதுதவிர, அவர்கள் விருப்ப ஓய்வில் சென்றனர். எனவே அவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை. சமீபத்தில் ஓய்வுபெற்றவர்கள், பணிமுறிவு அடிப்படையில் சென்றுள்ளனர். மேற்கண்ட காரணங்களினால்தான் நிதி வழங்கியதில் மாறுபாடு ஏற்பட்டது.
அதேநேரத்தில், கெடு முடிந்தகடைசி நாளில் 63 பேர் சம்மதித்துவிட்டனர். மேலும், சிலர் நாளை பணிமுறிவுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். 8 ஆயிரம் பணியாளர்களில் நூற்றுக்கும் குறைவான வெகு சிலரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.