Published : 25 Sep 2016 10:30 AM
Last Updated : 25 Sep 2016 10:30 AM

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகளுக்கான உச்சவரம்பு உயர்வு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக் கான செலவு உச்சவரம்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான உச்சவரம்பு ரூ.56,250-ல் இருந்து ரூ.90 ஆயிர மாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உள்ளாட்சித் தேர்தல் 2016-ல், ஊரக உள்ளாட்சி பகுதியில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர், நகராட்சி வார்டு உறுப்பினர் (இரண்டாம் மற்றும் முதல்நிலை), நகராட்சி வார்டு உறுப்பினர் (தேர்வு மற்றும் சிறப்பு நிலை), மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சென்னை மாநகராட்சி தவிர), சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்பு களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 2011-ம் ஆண்டு செலவு உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. இப்போது இத்தொகை ரூ.1 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான செலவு ரூ.56,250-ல் இருந்து ரூ.85 ஆயிரமாகவும், கிராம ஊராட்சித் தலைவர் தேர்தல் செலவுத் தொகை ரூ.22,500-ல் இருந்து ரூ.34 ஆயிரமாகவும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் செலவு உச்சவரம்பு ரூ.5,625-ல் இருந்து 9 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களில் பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் செலவு ரூ.11,250-ல் இருந்து ரூ.17 ஆயிரமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. அதுபோல, நகராட்சி வார்டு உறுப்பினர் (இரண்டாம் மற்றும் முதல்நிலை) தேர்தல் செலவு ரூ.22,500-ல் இருந்து ரூ.34 ஆயிரமாகவும், நகராட்சி வார்டு உறுப்பினர் (தேர்வு மற்றும் சிறப்புநிலை) தேர்தல் செலவு ரூ.56,250-ல் இருந்து ரூ.85 ஆயிரமாகவும், மாநகராட்சி வார்டு உறுப்பினர் (சென்னை மாநகராட்சி தவிர) தேர்தல் செலவு ரூ.33,750-ல் இருந்து ரூ.85 ஆயிரமாகவும் அதிகரிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான செலவுத் தொகை ரூ.56,250-ல் இருந்து ரூ.90 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x