ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை: அமைச்சர் கருப்பணன் பேட்டி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை: அமைச்சர் கருப்பணன் பேட்டி
Updated on
1 min read

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள சிப்காட்டில் 7782 சதுர அடியில் ரூ. 1கோடியே 90 லட்சத்து 30ஆயிரம் செலவில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

நிகழ்ச்சி நிறைவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பணன், "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த பல இடங்களில் எண்ணெய் நிறுவனங்களில் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த கிணற்றை அமைக்க தமிழக சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறவில்லை. எண்ணெய் எடுக்க எங்களிடம் அனுமதி பெறவரும் போது அனுமதிப்பதா வேண்டாமா என்பது அரசின் கொள்கை முடிவு" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், காஞ்சிபுரம் அருகே நந்தபேட்டை பகுதியில் கைத்தறி சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரித்து பூசிவாக்கம் ஏரியில் விடும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசின் பரிசீலனையில் உள்ளதாகக் கூறினார்.

முன்னதாக, விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் புதிய கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசுகையில்: தமிழகத்தில் 36 மாவட்டங்களில் 18 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் துறை சொந்த கட்டிடம் உள்ளது. அதில் இதுவும் ஒன்று. விரைவில் அனைத்து மாவட்டங்களில் சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விழாவில் அமைச்சர் கே.சி.கருப்பணன்.

புதிய நிறுவனங்கள் தொடங்க மாசுக்காட்டுப்பட்டு வாரியம் சார்பில் தடையில்லா சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நமது வருங்கால சமுதாயத்திற்கு நல்ல தண்ணீர், காற்று ஆகியவற்றை வழங்கவே இந்த துறை உள்ளது. ஆகவே நமக்கு நாமே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழல் அமைச்சகம் நமது பாதுகாப்புக்காக இயங்குகிறது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும் எனப் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா. கஜெலட்சுமி, இணை தலைமை பொறியாளர் ஆர். கண்ணன், சிப்காட் இருங்காட்டுக்கோட்டை உற்பத்தியாளர்கள் சங்க செயலர் எஸ். தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக வளாகத்தில் 9மரக்கன்றுகள் அமைச்சரால் நடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in