

பெட்ரோல், டீசல், காஸ் ஆட்டோக் களைத் தொடர்ந்து, எலக்ட்ரானிக் மற்றும் சூரியசக்தியில் இயங்கும் ஆட்டோக்கள் சென்னையில் விரைவில் இயக்கப்பட உள்ளன. இந்த ஆட்டோக்களை மின்சாரம் மற்றும் சூரியசக்தி மூலம் மாற்றி மாற்றி இயக்க முடியும்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் வாகன புகையால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதற்கு மாற்றுத் தீர்வு காணும் வகையில் பல்வேறு மாநகரங்களில் எலக்ட்ரானிக் மற்றும் சூரியசக்தி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மாறும் போக்கு மக்களிடம் அதிகரித்து வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்களிடமும் இந்த மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, பெங்களூரு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் தற்போது எலக்ட்ரானிக் ஆட்டோக்கள் ஏராளமாக ஓடத் தொடங்கிவிட்டன.
இந்த வகை ஆட்டோக்களை மின்சாரம் அல்லது சூரியசக்தி மூலம் சார்ஜ் செய்து இயக்கலாம். ஒருமுறை (6 மணி நேரம்) சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 100 கி.மீ. ஓடும். பெட்ரோல், டீசலை ஒப்பிடுகையில், இந்த முறையில் 30 முதல் 35 சதவீதம் வரை எரிபொருளை சேமிக்க முடியும். 50 சதவீத எரிபொருள் செலவும் மிச்சமாகும். இந்த ஆட்டோவின் விலை (ரூ.1.45 லட்சம்), சாதாரண ஆட்டோக்களின் விலையை ஒட் டியே உள்ளது. ஏற்கெனவே வைத் திருக்கும் பழைய ஆட்டோவிலும் எலக்ட்ரானிக் மற்றும் சூரியசக்தி மூலம் இயங்கும் இயந்திரத்தைப் பொருத்திக் கொள்ளலாம். இதற்கு ரூ.70 ஆயிரம் கூடுதலாக செலவாகும்.
இதுகுறித்து சோலார் வல்லுநரும், பி அண்ட் பி எனர்ஜி சொல்யூஷன் நிறுவன நிர்வாகி யுமான ஆர்.சரணவபெருமாள் கூறியதாவது:
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்று தொழில்நுட் பத்துக்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் மாறி வரு கின்றன. குறிப்பாக, காற்று மற்றும் சோலார் மின்உற்பத்தி அதிகரித்தல், மரங்களை நடுதல் உள்ளிட்ட நடவடிக்கையில் கள மிறங்கியுள்ளனர். தற்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத் தாத எலக்ட்ரானிக் மற்றும் சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் ஆட்டோக் களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 500-க்கும் மேற்பட்ட சோலார் ஆட்டோக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. சென்னையிலும் விரைவில் எலக்ட்ரானிக் ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன. இந்த வகை ஆட்டோக்களை தயாரிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அடுத்த ஒரு மாதத்துக்குள் இந்த ஆட்டோக்கள் சென்னையில் ஓடத் தொடங்கும். பின்னர், மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் இயக்கப்படும்.
முதல்கட்டமாக, 10 ஆட்டோக் களை தயாரித்து வருகிறோம். இதில் 6 பேர் வரை பயணம் செய்யலாம். வண்டலூர் பூங்கா, சென்னை ஐஐடி போன்ற இடங்களில் சோதனை முறையில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பஸ் போக்குவரத்து வசதியை இணைக்கும் வகையில் இந்த ஆட்டோக்கள் இயக்கப்படும். தொடர்ந்து வரும் ஆர்டர்களைப் பொறுத்து புதிய ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு சரவண பெருமாள் கூறினார்.