

கால்கள் பாதிக்கப்பட்ட 3 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள் 1,000 பேருக்கு ரூ. 10 லட்சம் செலவில் நடக்க உதவும் நடைப்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக இன்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
''மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வந்த 3 சதவீத இடஒதுக்கீட்டினை, 4 சதவீதமாக தமிழ்நாடு அரசு பணிகளிலும் உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளது. இந்த 4 சதவீத இட ஒதுக்கீடானது அனைத்து அரசுப் பணியிடங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு உள்ளாட்சி அமைப்புகள், அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவற்றிற்குப் பொருந்தும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் பயனளிக்கக் கூடிய வகையில் பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
1. கை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு முடநீக்கியல் சாதனங்கள், ஊன்றுகோல்கள் மற்றும் செயற்கை அவயங்கள் வழங்கப்பட்டு அவர்களுடைய சுதந்திரமான நடமாட்டத்திற்கு ஏதுவாக பல்வேறு வகையான மறுவாழ்வு பணிகள் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்கள் பாதிக்கப்பட்ட மூன்று வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு நடக்க உதவும் நடைபயிற்சி உபகரணங்கள் நடப்பாண்டில் 1,000 குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
2. மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ல் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்திடும் வகையில், அனைத்து அரசு பொதுக் கட்டிடங்களிலும் மின்தூக்கிகள், சாய்வு தள பாதை, கழிவறை வசதிகள் மற்றும் செவிதிறன் குறையுடையோர் எளிதில் அறியும் வண்ணம் குறியீடுகளும், பார்வையற்றோர் அறிந்துகொள்ளும் வண்ணம் பிரெய்ல் எழுத்துக்கள் மூலமும் தகவல் பலகைகள் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய வசதிகளை ஏற்படுத்த, நிபுணத்துவம் வாய்ந்த தொழில் நுட்ப வல்லுநர் / பணியாளர்கள் அடங்கிய தணிக்கை குழு நடப்பாண்டில் அமைக்கப்படும். இக்குழு தன்னுடைய பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற தடையற்ற சூழலை முழுமையாகவும் விரைவாகவும் ஏற்படுத்திட இயலும்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.