

தேனி மாவட்டத்தில் பெரிய குளம், சோத்துப்பாறை, தேவாரம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மா தோட்டங்கள் உள்ளன. இதில் காசாலட்டு, செந்தூரம் உட்பட பல்வேறு மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. இந்த மாம்பழங்கள் உள்ளூர் தேவை போக கேரளத்துக்கு அதிகமாக அனுப்பப்பட்டு வருகின்றன.
ஆனால், மாம்பழங்களை ரசாயன முறையில் பழுக்க வைத்து அனுப்புவதாகக் கூறி கேரள அரசு தேனி மாவட்ட மாம்பழங்கள் விற்பனைக்கு சில நேரங்களில் தடை விதித்து விடுகிறது. இதனால், தேனி மாவட்ட குடோன்களில் மாம்பழங்கள் தேங்கும் நிலை ஏற்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் பெரியகுளம் மா விவசாயிகள் கணேசன், மகாலிங்கம் ஆகியோர் கூறியதாவது: ஏப்ரல் முதல் ஜூலை மாதம் இறுதி வரை மா சீசன் உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 100 டன் வரை லாரிகள் மூலம் கேரளத்துக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. மா உற்பத்தி யை பொறுத்தவரை விவசாயிகள் கேரளத்தை முழுமையாக நம்பி உள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாம்பழம் விற்பனைக்கு கேரள அரசு திடீர் என தடை விதித்து விட்டதால், அவற்றை தமிழ கத்தில் விற்பனை செய்யவோ, பாதுகாக்கவோ முடியாமல் பல ஆயிரம் டன் மாம்பழங்கள் வீணா யின. இதனால் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தனர்.
இதன் காரணமாக சில விவசாயிகள் கேரளத்துக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு மாங்காய் பறித்து அவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஊறுகாய் தயாரிப்புக்கு அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாட்டு நிறுவனத் துக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த ஆண்டு மா வரத்து குறைந்து விட்டதால், குறைவான அளவே கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் தரத்துக்கேற்ப ஒரு டன் ரூ.22 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த விலை அடுத்த ஆண்டும் கிடைக்குமா? என்பது சந்தேகமே. இதனால் தமிழக அரசு தேனி மாவட்டத்தில் மாம்பழம் குளிர்பதனக் கிடங்கு அல்லது மாம்பழம் கூழ் தயாரிக்கும் தொழிற் சாலை அமைத்துக் கொடுத்தால் மா விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக அமையும் என்றனர்.