

சென்னையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம், தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மேலிடப் பார்வையாளர்களாக காங்கிரஸ் தேசிய செயலாளர் சின்னா ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் கே.ரகுமான்கான், கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னாள் மத்திய நிதி அமைச் சர் ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு, எம்.கிருஷ்ணசாமி, குமரிஅனந் தன், காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாநில எஸ்.சி. பிரிவுத் தலைவர் செல்வப்பெருந் தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தை தொடங்கிவைத்து பேசிய திருநாவுக்கரசர், ‘‘ஜெய லலிதா மறைவு, கருணாநிதியின் உடல் நலக்குறைவு ஆகியவற்றால் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு இழந்த செல்வாக்கை நாம் மீட்டெடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. எனவே, கூட்டணியைப் பற்றி கவலைப்படாமல் அதிமுக, திமுக இரண்டையும் சமதூரத்தில் வைத்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.
உறுப்பினர்கள் சேர்க்கை
கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எந்தவொரு கட்சியை யும் சந்தோஷப்படுத்தும் வகையில் நாம் நடந்துகொள்ளத் தேவை யில்லை. ஜனவரி 14 முதல் 2 மாதங்களுக்கு உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடைபெறு கிறது. இதில் கட்சியினர் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இளங்கோவன், ‘‘உறுப்பினர் சேர்க்கை பற்றி திருநாவுக்கரசர் பேசினார். நல்ல விஷயம்தான். நானும், தங்கபாலுவும் தலைவராக இருக்கும்போதும் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்தினோம். கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். ஆனா லும் எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட வில்லை. கூட்டணி பற்றி பேச வேண்டாம். அதிமுக, திமுகவை சமதூரத்தில் வைப்போம் என் கிறார். இன்னும் சில மாதங்களில் வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பீர்கள். அதிமுக தொண்டர் கள் யாரும் சசிகலாவை ஏற்கவில்லை. எனவே, அதிமுக தொண்டர்களை ஈர்க்கும் வகை யில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இல்லையேல் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக தமிழகத்தில் வலுப்பெற்று விடும். எனவே, சிலரை நம்பி தற்போது இருக்கும் கூட்டணியை கைவிட்டு விடக்கூடாது’’ என ஆவேசமாகப் பேசினார்.
அவருக்கு பதிலளித்த திரு நாவுக்கரசர், ‘‘அதிமுகவில் இருந்து வந்ததால் என்னை அதிமுகவுக்கு ஆதரவானவர் என சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். அது உண்மை அல்ல. ஜெயலலிதா இல்லாத சூழலைப் பயன்படுத்தி பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் வளர முடியாது. அதுபோன்ற நிலை வர காங்கிரஸ் அனுமதிக்காது’’ என்றார்.
தொடர்ந்து பேசிய இளங் கோவன், ‘‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய போராட்டம் எடுபடவில்லை. அதேநேரத்தில் ப.சிதம்பரம் நடத்திய பொதுக் கூட்டமும், ஊடகங்களில் அவர் அளித்த நேர்காணல்களும் மக் களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. எனவே, எந்த காரியத்தை யார் மூலம் செய்ய வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். பணமதிப்பு நீக்கத்தின் தீமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க காங்கிரஸ் தவறிவிட்டது’’ என்றார்.
வட்டார, கிராம அளவில்..
இளங்கோவனும், திருநாவுக்கர சரும் கடுமையாக வாக்குவாதம் செய்வதை அமைதியாக கவனித் துக் கொண்டிருந்த ப.சிதம்பரம், ‘‘பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் சரிந்துள்ளது. இதுமேலும் சரியும். இதுபற்றி மாவட்ட, வட்டார, கிராம அளவில் நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்’’ என்பதோடு முடித்துக் கொண்டார்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இளங்கோவன் - திருநாவுக்கரசர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.