

கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத திரை விருதுகள் விரைவில் ஒரு பிரம்மாண்ட விழாவில் வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) திமுக எம்.எல்.ஏ. வாகை. சந்திரசேகர், தமிழக திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்து அரசு விருதுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, "திமுக உறுப்பினருக்கு (வாகை. சந்திரசேகர்) தெரியுமோ, தெரியாதோ. முந்தைய தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, மூன்று ஆண்டுகளுக்கு காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்குகின்ற விழா நடைபெறவே இல்லை.
அதன் பின்னர் நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான், எல்லாவற்றிற்குமாகச் சேர்த்து ஒரு பெரிய விழாவை நடத்தினோம். அதைப்போலவே பல காரணங்களினால் திரைப்படக் கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு பிரமாண்டமான விழா நடத்தப்படும், விரைவில் அந்த விருதுகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் சின்னத் திரை கலைஞர்களுக்கு முதன்முதலாக விருதுகள் அறிவிக்கப்பட்டது என்னுடைய ஆட்சிக் காலத்தில்தான் என்பதையும்அவருக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்றார்.