Published : 17 Dec 2013 08:45 PM
Last Updated : 17 Dec 2013 08:45 PM

தருமபுரியிலும் செம்மரக் கொள்ளையர்கள் கைவரிசை

திருப்பதியைப் போலவே தருமபுரி மாவட்டத்திலும் அவ்வப்போது செம்மரங்களைக் கடத்திச் செல்லும் கும்பலை ஒடுக்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப் பகுதியில் செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற கும்பலைத் தடுக்கச் சென்ற வனத் துறை அதிகாரிகள் இருவர் அடித்துக் கொல்லப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, சேலம் மாவட்டம், ஆத்துரைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் செம்மரங்கள் கடத்தப்படுவது தொடர்கிறது. கடத்தல் கும்பல், திருப்பதியைப் போலவே வனத் துறையினர் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது. எனவே, மரக் கடத்தல் கும்பலை ஒடுக்க, அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை ஆர்வலர்கள் கூறியது: தருமபுரி மாவட்ட சமதளக் காடுகளில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு வனத் துறை மூலம் செம்மரங்கள் நடப்பட்டன. காடு வளர்ப்புத் திட்டத்தின்கீழ், ஏராளமான மரங்கள் நடவு செய்யப்பட்டன.

இவ்வாறு செம்மரங்கள் நடப்பட்ட வனப் பகுதியைச் சுற்றி யுள்ள நிலங்களை, ஆங்காங்கே உள்ள கிராமப்புற விவசாயிகளுக்கு குறைந்த குத்தகைக்கு விட்டனர். அங்கு, கொள்ளு, ராகி போன்ற மேட்டுநில தானியங்கள் பயிரிடப்பட்டன. அந்த நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடப்பட்ட செம்மரக்கன்றுகளைப் பாதுகாத்து வந்தனர். இதனால், செம்மரங்கள் நன்கு வளர்ந்து, காடாக மாறியது.

இந்த செம்மரங்கள் வளர்ந்த பின்னர், அப்பகுதியில் விவசாயம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் அரூர், கோட்டப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, தொப்பூர், பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பல்லாயிரம் ஏக்கரில் செம்மரக் காடுகள் உள்ளன. இந்த மரங்கள் ஒவ்வொன்றும் சுமார் 40 அடி உயரத்துக்கும் மேலாக வளர்ந்துள்ளன. கடந்த 2011 டிசம்பர் மாதம், பொம்மிடி அருகேயுள்ள பூதநத்தம் பகுதியில், ஒரே இரவில் நன்கு முற்றிய 62 செம்மரங்களை வெட்டிய கும்பல், கடத்திச் சென்று விட்டது. சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பகுதியில், சில செம்மரங்கள் திருடப்பட்டன.

தொப்பூர் வனப் பகுதியிலும் அவ்வப்போது செம்மரங்கள் திருடப்படுகின்றன. கடந்த இரு மாதIங்களுக்கு முன்பு, அரூர் வட்டத்தில் 10 செம்மரங்களைக் கடத்தியதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு, தருமபுரி மாவட்டத்தில் செம்மரக் கடத்தல் பரவலாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது சிலர் கைது செய்யப்பட்டாலும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை. இதனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் மரங்கள் கடத்தப்படுவது தொடர்கிறது. எனவே, மரக் கடத்தல் கும்பலைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நவீன ஆயுதங்களுடன் வனத் துறை மற்றும் அதிரடிப்படைக் காவலர்களை, அரிய வகை மரங்கள் உள்ள வனப் பகுதியில் அடிக்கடி ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x