ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர கருணாநிதி வலியுறுத்தல்

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனித் தீர்மானம் கொண்டு வர கருணாநிதி வலியுறுத்தல்
Updated on
1 min read

ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில், இந்தியா தனியாக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொண்டு வரவிருக்கும் தீர்மானம், பெருமளவுக்கு தீர்வு காண்பதாக இருக்குமென்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், ஆணையக் கூட்டத்தில் பரிசீலனைக்காக வைக்கப்பட்டிருக்கும் வரைவுத் தீர்மானம் அனைத்துத் தரப்பிலும் பெருத்த ஏமாற்றத்தையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் வரைவுத் தீர்மானம் "தமிழ் இனப்படுகொலை" என்பதைப் பதிவு செய்ய மறுத்துள்ளது. மேலும் கால அவகாசம், இலங்கை அரசின் இந்த தீய முயற்சிக்கு உதவிடவே பயன்படும்.

ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எவ்வித ஆக்கப்பூர்வமான விளைவையும் ஏற்படுத்தவில்லை. அதைப் போலவே தான் இந்தத் தீர்மானமும் இலங்கை அரசால் புறக்கணிக்கப்பட்டு எந்தப் பயனையும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கிடப் போவதில்லை.

எனவே "டெசோ" சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் பல முறை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டபடி இந்திய அரசே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தனித் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது தான் உகந்த வழியாக இருக்க முடியும்.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், இனப் படுகொலை ஆகியவை குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மை வாய்ந்த, சர்வ தேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும்; ஈழத் தமிழர்கள் தங்களுக்குத் தேவையான அரசியல் தீர்வை, அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்வண்ணம் ஐ.நா. மேற்பார்வையில்; ஏற்கனவே சில நாடுகளில் நடத்தியதைப் போல, "பொது வாக்கெடுப்பு" நடத்தப்பட வேண்டுமென்றும்; தீர்மானத்தை இந்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதே ஈழத் தமிழர்களுக்கும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கும், தாய்த் தமிழகத்திலே வாழும் தமிழர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் நிறைவளிக்கக் கூடிய காரியமாக அமையும்" இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in