

"தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது" தமிழக அமைச்சர்கள் அறிவித்த முடிவு இது.
இது எந்த அளவுக்கு உறுதியான முடிவு என்ற வாதங்கள் வேறு ஒரு கோணத்திலானது. ஆனால், இந்த முடிவு எத்தகையது என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் சிலர் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
நீண்ட கால அரசியல் பார்வையாளரான ஒருவர் தி இந்து ஆங்கிலத்திடம் இவ்விவகாரம் குறித்து கூறும்போது, "மாறிவரும் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப அதிமுக தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது என்பதையே இந்த முடிவு உணர்த்துகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் முதன்மை கோரிக்கையும் சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்கிவைப்பது என்பதுதான்" என்றார்.
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, "தலைமைக்கு எதிரான இந்த திடீர் போர்க்கொடிக்குக் காரணம் அண்மையில் நடந்த வருமானவரித் துறை சோதனையே தவிர கொள்கை அடிப்படையில் இங்கே யாரும் ஒன்றுபடவில்லை எல்லாம் சுயலாபத்துக்காக" என்றார்.
தினகரனே ஏற்றுக்கொள்ளாத போது..
அமைச்சர்கள் முடிவை வரவேற்றும் விமர்சித்தும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து கூறியிருக்கும்போது, பெயர் குறிப்பிடவிரும்பாத எம்.எல்.ஏ. ஒருவர் இவ்வாறு கூறுகிறார்:
அண்மையில் ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றபோது சசிகலாவின் புகைப்படத்தை பயன்படுத்துக்கூடாது என டிடிவி.தினகரன் உறுதிபட உத்தரவிட்டிருந்தார். கட்சித் தொண்டர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் சசிகலா மீது இருந்து அதிருப்தியே அதற்குக் காரணம். அவரே சசிகலாவை ஒதுக்கிவைத்தபோது கட்சி நலனுக்கு நாங்கள் ஏன் தினகரன் உள்ளிட்ட குடும்பத்தாரை புறக்கணிக்கக்கூடாது?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.
கைவிட்டுப்போன ஆதிக்கம்..
சசிகலாவின் அண்ணன் மகன் டிடிவி.மகாதேவன் இறுதிச் சடங்கில் முதல்வரோ, மூத்த அமைச்சர்களோ ஏன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளோ கலந்து கொள்ளவில்லை. அப்போதே, கட்சியின் மீதான சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் முடிவுற்றது உறுதியாகிவிட்டது. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில்தான் செவ்வாய்க்கிழமை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் சில அறிவிப்புகளை வெளியிட்டார் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம்.
© தி இந்து ஆங்கிலம்