

‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழக அரசு இயற்றிய 2 சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாக பெற்றுத் தருமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு நேற்று அவர் எழுதிய கடிதம்:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் தற்போது நடைமுறையில் உள்ள மாணவர் சேர்க்கை முறையை பாதுகாக்கும் வகையில் தமிழக சட்டபேரவையில் 2 மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தமிழக ஆளுநரின் ஒப்புதலுடன் அந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. தற்போது வரை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில இட ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. மாநில அரசின் கொள்கையின்படி, இந்த 50 சதவீத இடங்கள் மருத்துவ பட்டப் படிப்பு முடித்து 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனை களில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஒதுக்கப் படுகிறது.
நீட் சட்ட வரைமுறைகளின்படி மாநில அரசு நீட் மதிப்பெண் களுடன் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சிலவற்றை பின்பற்றி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.
இந்நிலையில் நீட் வரைமுறை களுடன் முரண்படக் கூடிய இந்திய மருத்துவ கழகத்தின் நடைமுறை விதிகளின்படி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி தீர்ப்பு வழங்கி உள்ளது.
இது அரசு பணியில் உள்ள மருத்துவர்களை பாதிக்கும். இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு முறையீடு செய்ய உள்ளது.
இது அரசு பணியில் உள்ள மருத்துவர்களை பாதிக்கும். இந்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு முறையீடு செய்ய உள்ளது.
நீட் நுழைவு தேர்வால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான பயிற்சி மையங்கள் ஊரக பகுதிகளில் இல்லை.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பியுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. அந்த மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் கிடைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.