Published : 23 Jun 2016 08:56 AM
Last Updated : 23 Jun 2016 08:56 AM

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பதவியை 2 மாதத்துக்குள் நிரப்ப வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பதவியை இரண்டு மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்தனர். அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:-

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாது காப்பு ஆணையத் தலைவர் பதவிக் காலம் கடந்த ஜனவரி 17-ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. அதன்பிறகு ஐந்து மாதங்கள் ஆன பிறகும் அந்தப் பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இப்பதவி, காலியாக வைத்திருக்கக்கூடிய பதவி இல்லை. முன்னரே நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இப்பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, அதனால் கால அவகாசம் வேண்டும் என அரசு வழக்கறிஞர் கோரினார். அப்போது கால அவகாசம் அளித்ததுடன், குறிப்பிட்ட காலத்துக்குள் அப்பதவி நிரப்பப்படாவிட் டால், சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் உத்தரவிடப் பட்டது. அதன்பிறகும் அந்தப் பதவி நிரப்பப் படவில்லை. இப்போது இரண்டு மாதம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற் குள் இப்பதவியை நிரப்பவில்லை என்றால், துறைச்செயலாளர் நேரில் ஆஜராக நேரிடும்.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 634 இல்லங்களை ஆய்வு செய்ததில், சரிவர நடத்தப்படாத காரணத்தால் 13 இல்லங்கள் மூடப்பட்டன. அங்கிருந்த 231 குழந்தைகளில், 212 குழந்தைகள் அவர்களது பெற்றோரால் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 19 குழந்தைகள் வேறு இல்லங்களுக்கு மாற்றப்பட்டனர். இதன்மூலம் குழந்தைகள் இல்லங்களில் பிரச்சினைகள் இருப்பது தெரியவருகிறது.

இந்த சோதனையிலே இத்தனை குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பது தெரிய வந்திருப்பதால், தமிழ்நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால், இதுபோன்ற சூழலில் இருக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே அதுகுறித்து பதில் தர வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x