

காணாமல்போன குழந்தைகளை மீட்கவும், குழந்தைகள் காணாமல் போவதைத் தடுப்பதற்குமான உறுதியான திட்டத்துடன் காவல் துறையில் டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் இருவர் ஜூன் 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த நிர்மல் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், “சென்னை வால்டாக்ஸ் சாலையில் அண்மையில் கடத் தப்பட்ட இரண்டு குழந்தை களை மீட்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தேன். அதன்மீது நடவடிக்கை எடுக்காத தால் கடத்தப்பட்ட அந்த 2 குழந்தைகளை மீட்கவும், குழந் தைகள் கடத்தப்படுவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்காக அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்றும், அதனைச் செயல்படுத்துவதற்காக சிபிசிஐடி டிஎஸ்பி ராஜா சீனிவாசன், எஸ்பி ராஜேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட உள்ள தாக அரசு தரப்பில் தெரிவிக் கப்பட்டது.
அதையடுத்து காணாமல் போன குழந்தைகளை மீட்பது, குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுத்தல் போன்றவற்றுக்கான உறுதியான திட்டத்துடன் இந்த இரண்டு காவல் அதிகாரிகளும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கூறும்போது, ‘இவ்வழக்கில் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், காணாமல் போன குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்குவது பற்றி யும், குழந்தைகளைக் கண்டுபிடிப் பதற்கான திட்டம் என்ன என்பது பற்றியும் சொல்லப்படவில்லை. இங்கு வந்திருக்கும் குழந்தை களின் பெற்றோரைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது. அவர்களுக்கு யாராவது உதவ லாமே’ என்று நீதிபதிகள் தெரி வித்தனர்.
உடனே வழக்கறிஞர் புகழேந்தி தாமாக முன்வந்து அந்த இரண்டு பெற்றோருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கினார். அதையடுத்து காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்காகவும், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குமான உறுதியான திட்டத்துடன் காவல்துறையில் டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் இருவர் ஜூன் 20-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.