

அசோக் கே.பேன்கர் எழுதிய ‘டென் கிங்ஸ்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கமல்ஹாசன், புத்தகத்தை வெளியிட்டார்.
முதல் பிரதியை இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் பெற்றுக் கொண்டார். சென்சார் போர்டு மண்டல அதிகாரி பக்கிரிசாமி, புத்தக வெளியீட்டாளர் மனோஜ் குல்கர்னி உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது: அசோக் கே.பேன்கர் 10 வேதகால அரசர்களைப் பற்றி துணிவுடன் எழுதியுள்ளார். மகாபாரதம், ராமாயணம் ஆகியவை திரும்பத் திரும்ப சொல்லப்பட்ட தால்தான் இன்றும் நிற்கிறது. அதுபோல இந்த கதையும் தொடர்ந்து பேசப்பட்டதால், தற்போது எழுதப்பட்டுள்ளது.
இந்த கதை படமாக்கப்பட உள்ளதாக கேள்விப்பட்டேன். அதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புத்தகம் விரைவில் தமிழிலும் வரவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.