

அமைச்சர்களின் குறுக்கீடு இல்லாமல் பேசுவது எப்படி என்பது தொடர்பாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசுவுக்கு முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைத்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி) பேசினார். அவரது கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.பெஞ்சமின் ஆகியோர் அவ்வப்போது குறுக்கிட்டு பதிலளித்தனர்.
அமைச்சர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதாகக் கூறி திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ''திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு அவர்களுக்கு நட்பு ரீதியாக ஒரு ஆலோசனை கூற விரும்புகிறேன். தாங்கள் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு அதற்கு அமைச்சர் பதிலளிப்பாரா? அரசு நடவடிக்கை எடுக்குமா? என கேள்வியுடன் முடிக்கிறீர்கள். இதனால் அமைச்சர்கள் எழுந்து பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, வினாவோடு முடிக்காமல், வேறு விதமாக பேச்சை முடித்தால் குறுக்கீடுகளை ஓரளவுக்கு தவிர்க்கலாம்'' என்றார்.
இதனை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையத் தட்டி வரவேற்றனர். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் பி.தனபால், ''முதல்வர் ஆலோசனையின் படி பேசுங்கள்''என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தங்கம் தென்னரசு, ''நல்ல யோசனை'' என்றார். இந்த சுவாரஸ்யமான விவாதத்தை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ரசித்தனர்.