

ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி, 2 காவல் ஆய்வாளர்கள் ஆகிய 4 பேரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் அணியினர் புகார் கூறிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்து, இறுதியாக 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இதற்கிடையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். வேட்புமனு தாக்கலின் போது அரசு அதிகாரிகள், போலீஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக, ஓபிஎஸ் அணியின் சார்பில் சென்ற மைத்ரேயன் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் உமேஷ் சின்ஹாவிடம் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் வாக்காளர் பதிவு அதிகாரி உட்பட 4 பேரை இடமாற்றம் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய சார்பு செயலர் ராஜன் ஜெயின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுவண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் எஸ்.ரமேஷ் பாபு, தண்டையார்பேட்டை காவல் ஆய் வாளர் என்.பாலகிருஷ்ண பிரபு, வாக்காளர் பதிவு அதிகாரியான தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் எம்.விஜயகுமார், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான தாசில்தார் சேகர் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இதில், எம்.விஜயகுமார், சேகரை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வேறு எந்த பணியிலும் நியமிக்கக் கூடாது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசித்து, இந்த இடங்களுக்கு உடனடியாக மாற்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, 4 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில், புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தமிழக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.