

கர்நாடக அரசு மேகதாது அருகில் காவிரி நதியின் குறுக்கே அணைக்கட்டுவதற்கு முடிவு செய்து 5 ஆயிரத்து 929 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடக அரசு மேகதாது அருகில் காவிரி நதியின் குறுக்கே அணைக்கட்டுவதற்கு முடிவு செய்து 5 ஆயிரத்து 929 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு ஆண்டு தோறும் வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இதுவரையில் உரிய காலத்தில் முழுமையாக வழங்கவில்லை.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் - கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கும். ஆனால் இதனையெல்லாம் கர்நாடக அரசு ஒரு போதும் ஏற்பதில்லை. அதற்கு மாறாக கர்நாடக மாநிலத்துக்கே தண்ணீர் இல்லை என்று தவறான தகவலை தெரிவிக்கிறது.
கர்நாடக அரசு - காவிரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவோம் என்று கூறுவதும், இதனை எதிர்த்து தமிழக அரசு கர்நாடக அரசை கண்டிப்பதும், மத்திய அரசுக்கு தெரிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் கர்நாடக அரசின் அணைக்கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்க வில்லை என்பது தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும்.
தற்போது மீண்டும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிப்பதால், இதற்கு மத்திய அரசு ஒரு போதும் அனுமதி அளிக்கக்கூடாது. மேலும் கர்நாடக அரசு மேற்கொள்ளும் அணைக்கட்டும் திட்டம் குறித்து தேசிய நீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக்குழு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஆகியவையும் தமிழக நலன் கருதி பரிசீலனை செய்யக் கூடாது.
காரணம் கர்நாடக அரசு அணைக்கட்டினால் தமிழகத்தில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் சூழல் உருவாகும்.
தமிழக அரசு உடனடியாக இது தொடர்பாக கர்நாடக அரசிடம் பேசி அணைக்கட்டும் முயற்சியை கைவிட வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசும் தமிழகத்தின் தண்ணீர் தேவையை கவனத்தில் கொண்டு கர்நாடக அரசின் அணைக்கட்டும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.