

மதுரையில் குடியிருப்புப் பகுதியில் மனமகிழ் மன்றம் பெயரில் "பார்" தொடங்கப்பட்டிருப்பதாகவும், அமைச்சர் ஆதரவுடன் நடத்தப்படு வதாகவும் புகார் எழுந்துள்ளது.
மதுரை மேலமாசி வீதி அய்யப்பன் கோயில் எதிரே உள்ள சம்பந்தமூர்த்தி தெருவில் ‘சிவா ரெக்கரேஷன் கிளப்’ என்ற பெயரில் மனமகிழ் மன்றம் ஒன்று கடந்த மாதம் தொடங்கப்பட்டது. குடியிருப்புப் பகுதியில் தொடங்கப்பட்ட இந்த கிளப்பை திறக்க அனுமதிக்கக் கூடாது என்று முன்னாள் எம்.எல்.ஏ. நன்மாறன் தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் முன்பே, தற்போது அந்த கிளப் செயல்படத் தொடங்கியுள்ளது.
இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் லெனின் கூறுகையில், “இந்த மனமகிழ் மன்றத்தைத் தொடங்கி இருப்பவர், முன்னாள் தி.மு.க. அமைச்சர் பெரியகருப்பனின் உறவினர் அழகர்சாமி. மதுரையில் செந்தூர் என்ற பெயரில் தங்கும் விடுதி நடத்தி வரும் இவர், கடந்த தி.மு.க. ஆட்சியில் சம்பந்தமூர்த்தி தெருவில் பார் நடத்த அனுமதி கேட்டார். அது குடியிருப்புப் பகுதி என்பதால், அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு பார் நடத்த மாவட்ட ஆட்சியர் சகாயம் அனுமதி மறுத்துவிட்டார். இப்போது ஆட்சி மாறியதும், அ.தி.மு.க. அமைச்சர் ஒருவரின் உதவியுடனும், சில அதிகாரிகளின் உடந்தையுடனும் அதே இடத்தில் மனமகிழ் மன்றம் நடத்த அனுமதி பெற்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் எங்கள் கட்சியைச் சேர்ந்த தோழர் நன்மாறன் தலைமையில் அனைத்துக் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். மனு கொடுத்து சுமார் 15 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அந்த "பார்" செயல்படத் தொடங்கிவிட்டதால், அப்பகுதியில் குடித்துவிட்டு சிலர் ரகளை செய்கிறார்கள். இதனால், அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த மனமகிழ்மன்றத்தை மூடக் கோரி போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.
பெயர் வெளியிட விரும்பாத பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “மது உள்ளிட்ட தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமை யானவர்களை நல்வழிப்படுத்தும் பணியை நாங்கள் செய்கிறோம். ஆனால், எங்கள் தியான மையத்துக்கு நேர் எதிரே அவர்கள் பார் நடத்துகிறார்கள். மதுரையில் பார் நடக்கிற இடத்தை எல்லாம் யாரும் எதிர்க்கவில்லையே? குடியி ருப்பு மற்றும் தியான மையம் எதிரே நடத்த வேண்டாம் என்றுதானே சொல்கிறோம்” என்றனர்.
மனமகிழ்மன்ற உரிமையாளர் அழகர்சாமியிடம் கேட்டபோது, “பெரியகருப்பன் என் அண்ணனின் சம்பந்தி என்பது உண்மைதான். ஆனால், அவருக்கும் எனக்கும் ஆகாது. இல்லை என்றால் "பார்" கேட்டபோதே அவர் செய்து கொடுத்திருப்பாரா? நத்தம் விஸ்வநாதன் என் நண்பர்தான். ஆனாலும், சட்டத்துக்கு உட்பட்டுதான் அதிகாரிகள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ரூ.7 கோடி செலவழித்து சொந்த இடம் வாங்கி பார் அமைத்திருக்கிறோம். தொழில் போட்டியால் சிலர் எங்களுக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள்” என்றார்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் கேட்ட போது, “அந்த மனமகிழ்மன்றம் குறித்த புகார் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஆயத்தீர்வை உதவி கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.