Published : 21 Feb 2014 12:00 AM
Last Updated : 21 Feb 2014 12:00 AM

வருண்குமார் ஐ.பி.எஸ்.ஸை கைது செய்ய வேண்டும்- காவல் ஆணையரிடம் பிரியதர்ஷினி புகார்

ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமாரை கைது செய்ய வேண்டும் என்று பிரியதர்ஷினி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 2011-ம் ஆண்டு கொடுத்த புகாரில்,

“ஐ.ஏ.எஸ். தேர்வில் பங்கேற்பதற்காக தனியார் பயிற்சி மையத்தில் பயின்றபோது வருண்குமார் என்பவரை சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.

எங்கள் இருவர் வீட்டிலும் எங்கள் முடிவை ஏற்றுக் கொண்டனர். 2010-ல் நடந்த தேர்வில் வருண்குமார் வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட செலவுகளை சமாளிப்பதற்காக நான் எனது நகைகளை அடமானம் வைத்து வருண்குமாருக்கு பணம் கொடுத்தேன்.

வருண்குமார் ஐ.பி.எஸ். ஆன பிறகு அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. நான் அவரைத் திருமணம் செய்துகொள்ள அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று கூறினார். முடிவில் என்னைத் திருமணம் செய்துகொள்ள வருண்குமார் மறுத்து விட்டார். வருண்குமார் மீதும்,

அவரது பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் பிரியதர்ஷினியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வருண்குமாருக்கு முன்ஜாமீன் வழங்கியது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பிரியதர்ஷினி மனு தாக்கல் செய்தார். பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. விசாரணை முடிவில், வருண்குமாருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஐ.பி.எஸ். பயிற்சி முடித்த வருண்குமார் சில மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் அருப்புக்கோட்டைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பிரியதர்ஷினி வியாழக்கிழமை பிற்பகல் வந்தார்.

அவருடன் ஜனநாயக மாதர் சங்க செயலாளர் வனஜா, மகளிர் சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த மனோண்மணி ஆகியோரும் வந்திருந்தனர். அங்கு நிருபர்களிடம் பேசிய பிரியதர்ஷினி, “முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டு 6 நாட்கள் கடந்துவிட்டன.

ஆனால் வருண்குமாரை கைது செய்ய காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரும் சரண் அடையவில்லை. வேறு வழியின்றி மகளிர் அமைப்பு உதவியை நாடி இருக்கிறேன். அவரை கைது செய்யும் வரை நான் ஓயப்போவது இல்லை" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x