Published : 21 Jan 2017 04:57 PM
Last Updated : 16 Jun 2017 12:02 PM
ஆளுநர் வித்யா சாகர் ராவ் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்தார். அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது. இதனால் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் ஓபிஎஸ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
மத்திய அரசின் 1960-ஆம் ஆண்டைய மிருக வதை தடுப்புச் சட்டத்திற்கு மாநில திருத்தம் செய்யப்பட்டு அதற்கான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் உத்தரவு வெள்ளிக்கிழமை இரவு பெறப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கான ஒப்புதல் மாநில ஆளுநரிடமும் பெறப்பட்டது. இதன்மூலம் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், ஆளுநர் வித்யா சாகர் ராவ் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்தார்.
அவசர சட்டம் 6 மாதத்துக்கு செல்லும்
ஜல்லிக்கட்டு மீதான அவசர சட்டம் 6 மாத காலத்துக்கு அமலில் இருக்கும். ஜல்லிக்கட்டு தடையை நிரந்தரமாக நீக்க சட்டத்தை திருத்த வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை காலை ஜல்லிக்கட்டு
இதை அடுத்து தமிழகத்தில மதுரை அலங்காநல்லூர், அவனியாபுரம் பகுதிகளில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைக்கிறார்
அலங்காநல்லூரில் நாளை காலை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார்.
மதுரையில் ஏற்பாடுகள் தீவிரம்
3 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் மதுரை விழாக் கோலம் பூண்டுள்ளது. மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இன்று இரவு 8.45 மணிக்கு முதல்வர் ஓபிஎஸ் மதுரை விரைகிறார்.
தொடரும் இளைஞர்களின் போராட்டம்
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நிரந்தர சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மெரினா, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!