

செம்மொழி மாநாட்டை குடும்ப மாநாடு என அமைச்சர் வேலுமணி கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் நேற்று சமூக நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதில், திமுக சார்பில், திண்டிவனம் தொகுதி உறுப்பினர் சீத்தாபதி பேசும்போது, ‘‘தமிழகத் தில் திமுக ஆட்சியில்தான் டிவி வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழு திட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி கொண்டுவந்தார். 50 ஆயிரம் சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார். தமிழுக்கு செம் மொழி அந்தஸ்தையும் அவர்தான் பெற்றுத்தந்தார், செம்மொழி மாநாட்டை நடத்தினார். தமிழ் வழியில் படித்தோருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தார்’’ என்றார்.
இதற்கு பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி யவர் முதல்வர் ஜெயலலிதாதான். செம்மொழி மாநாட்டை கோவை யில் நடத்தியது எங்களுக்கு தெரியும். அது அரசு மாநாடு அல்ல; குடும்ப மாநாடு. நீங்கள் எல்லோருக்கும் டிவி வழங்க வில்லை. வழங்கிய இடங்களில் வெடித்தது’’ என்றார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக கொறடா அர.சக்கரபாணி, ‘‘குடும்ப மாநாடு என்ற வார்த்தையை நீக்க வேண்டும்’’ என பேரவைத் தலைவர் பி.தனபாலிடம் கோரி னார்.
ஆனால், பேரவைத் தலைவர் தனபால், இந்த விஷயம் ஏற் கெனவே பலமுறை விவாதிக்கப் பட்டது என்பதால் நீக்கத் தேவையில்லை என்று கூறியதுடன் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுத்துவிட்டார். இதனால், அவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. பேரவைத்தலைவர் இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்காததால், திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில், காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் திமுக கொறடா சக்கரபாணி கூறியதாவது:
எங்கள் உறுப்பினர் சீத்தாபதி இலவச டிவி குறித்து பேசியதற்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட டிவி வெடித்துவிட்டது என்றார். எங்கள் ஆட்சியில் அனைத்து கட்சியினரையும் அழைத்து, டெண்டர் விடப்பட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. தற்போது அந்த டிவியில்தான் மக்கள் நாட்டு நடப்புகளை பார்க்கின்ற னர். இதை அமைச்சர் கொச்சைப் படுத்துகிறார். அதேபோல், செம் மொழி மாநாட்டில் உலக தமிழ் அறிஞர்கள் பங்கேற்றனர். அதையும் அவர் கொச்சைப்படுத்து கிறார்.
அதிமுக ஆட்சியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப் பட்டது. அவை முழுமையாக வழங்கப்படவில்லை.அந்த பொருட்களில் பல இன்று காயலாங்கடைகளில் உள்ளன. அவை நிகழ்ச்சிகளுக்கு ஒத் துழைப்பு தருவதில்லை என பேரவைத்தலைவர் கூறுகிறார்.
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முழுமை யாக பங்கேற்று வருகிறார். திமுக உறுப்பினர்களை வெளி யேற்ற வேண்டும் என்ற நோக்கில்தான் அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளை கூறுகின்ற னர். திமுக ஆட்சியில் சட்டப் பேரவையில் ஜனநாயகம் மதிக்கப் பட்டது. தற்போது மதிக்கப்பட வில்லை. முதல்வர் ஜெயலலிதா புகழ்பாடும் மன்றமாக செயல் படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.