Published : 16 Oct 2013 04:26 PM
Last Updated : 16 Oct 2013 04:26 PM

காஞ்சிபுரத்தில் லாரி - அரசுப் பேருந்து மோதி விபத்து: 6 பேர் பலி

காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே முன்னே சென்ற கன்டெய்னர் லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் வழியாக இன்று காலை அரசுப் பேருந்து 46 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அதற்கு முன்னே சென்றுகொண்டிருந்த காற்றாலைக்கான இறக்கைகளை ஏற்றிச்செல்லும் லாரி (100 அடி நீளம் கொண்டது), அப்பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துவதற்காக, தீடீரென வலது பக்கம் திரும்பியது.

அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்தின் வலது பக்கம், முன்னே சென்ற லாரி மீது மோதியது. இதில் பேருந்தின் வலது பக்கம் முழுவதும் சேதமடைந்தது. அப்பகுதியில் அமர்ந்திருந்த 6 பேர் உயிரிழந்தனர். பேருந்தின் வலது பக்கம் அமர்ந்திருந்த பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர். சுங்குவார்சத்திரம் போலீஸார் படுகாயமடைந்த பயணிகளை மீட்டு, காஞ்சிபுரம் அரசுப் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக வாகன தொழிற்சாலையில் இணைப் பொதுமேலாளராக பணிபுரியும் வேலூர்- ஊசூரைச் சேர்ந்த சிவசங்கரன் (35), சென்னை - தேனாம்பேட்டையைச் சேர்ந்த கோமதி (47), வாலாஜா- பெரியகரத்தைச் சேர்ந்த சதீஷ் (32), திருவொற்றியூரைச் சேர்ந்த சிங்காரவேலு (31), காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த அருணாசலம் (31), வாணியம்பாடியைச் சேர்ந்த ராஜவேலு (28) ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.

பேருந்து ஓட்டுநர் அன்பு மற்றும் பயணிகள் சிலரும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x