

தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி போலீஸாரின் பெட்டிகளை உடைத்து 45 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, ஆவடி படை பயிற்சி மைய போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் செயல்படுகிறது தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணி. இந்த அணியில் தற்போது, 400 பயிற்சி காவலர்கள் சிறப்பு பயிற்சி பெற்று வருகின்றனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணி வளாகத்தில் உள்ளது ஆவடி படை பயிற்சி மையம்.
இந்த மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கொளத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(26) என்ற போலீஸ்காரர். இவர் 2011-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தவர். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணி பயிற்சி போலீஸார் தங்கும் அறைக்கு சென்ற முத்துப்பாண்டி, பயிற்சி போலீஸார் சிலரின் பெட்டிகளை உடைத்து, அந்தப் பெட்டிகளில் இருந்த 45 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2-ம் அணிக்கு பயிற்சி அளிக்கும் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த ஆவடி போலீஸார் நேற்று முத்துப்பாண்டியை கைது செய்து, பூந்தமல்லி ஜெ.எம்.-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம், ஆவடி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.