

கோயம்பேடு – அசோக் நகர் இடையே 2-வது நாளாக சனிக்கிழமையும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. 5.5 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதையில் சென்று வந்த ரயிலை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
சென்னையில் 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே பறக்கும் பாதையில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்த வழித் தடத்தில் அக்டோபர் மாதம் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக பிரேசிலில் இருந்து தலா 4 பெட்டிகளைக் கொண்ட 5 மெட்ரோ ரயில்கள் சென்னை வந்துள்ளன. இவை கோயம்பேடு பணிமனையில் உள்ள 800 மீட்டர் நீள ‘டெஸ்ட் டிராக்’கில் ஓட்டி சோதனை செய்யப்பபட்டு வருகிது.
இந்நிலையில் கோயம்பேடு – அசோக்நகர் இடையே 5.5 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது. இதையடுத்து, 2-வது நாளாக சனிக்கிழமையும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை ரயிலில் பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். 4 பெட்டிகளைக் கொண்ட மெட்ரோ ரயில் மதியம் 12.05 மணிக்கு கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. 5 முதல் 35 கி.மீ. வேகம் வரை ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் பெட்டிகள் முழுவதும் ஏ.சி வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும் பெண்களுக்கு தனிப் பிரிவு, மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இருக்கைகள், அவசரகால கதவுகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
மக்கள் ஆர்வம்
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தின்போது வழியெங்கும் வீடுகளில் உள்ள மக்கள் மாடியில் நின்று கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சிலர் செல்போன் மூலம் ஆர்வமாக படம் எடுத்துக் கொண்டனர். சாலைகளில் சென்றவர்களும் மெட்ரோ ரயிலை ஆர்வத்துடன் பார்த்தனர்.
சோதனை ஓட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் நரசிம்ம பிரசாத், தலைமை திட்ட மேலாளர் அர்ஜூனன் ஆகியோர் கூறியதாவது:
மற்ற மாநிலங்களில் ஓடும் மெட்ரோ ரயில்களைவிட பல்வேறு சிறப்புகள் இந்த ரயிலில் உள்ளன. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது.
மொத்தம் 42 ரயில்கள் இயக்கப்படும். இதில் 9 ரயில்கள் பிரேசிலில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. மற்ற ரயில்கள் ஆந்திராவில் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படும். இந்த ரயில்கள் தானியங்கி முறையில் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ஒரு மெட்ரோ ரயிலில் (4 பெட்டி) மொத்தம் 1,276 பேர் பயணம் செய்யலாம். 176 பேர் அமர்ந்தும் 1100 பேர் நின்று கொண்டும் பயணம் செய்ய முடியும்.
பயணிகள் பாதுகாப்புக்காக ரயிலில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். மாற்றுத் திறனாளிகள், வயதானவர்களின் வசதிக்காக வீல் சேர்களும் இருக்கும். ரயில் நிலையம் உள்ளிட்ட விவரங்களை அறிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கும். பெட்டியில் இருக்கும் பட்டனை அழுத்தி, ரயில் இன்ஜின் டிரைவரை அவசர உதவிக்கு அழைக்கலாம்.
பயணிகள் வெளியே பார்ப்பதற்கு வசதியாக பெட்டிகளின் இருபுறமும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் முழுவதும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே வரும் அக்டோபரில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.