

ஒடிசா கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் வெப்பத் தின் தாக்கம் சற்று குறைந்திருப் பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் ஏப்ரல் மாதம் முதல் கடும் வெயில் வாட்டி வருகிறது. மே 2-வது வாரத்தில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
ஜூன் 2-வது வாரத்தில் கேரளத் தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக 2 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சில நாட்கள் மட்டும் குளிர்ந்த சூழல் நிலவியது.
பின்னர் சென்னையில் மீண்டும் வெயில் வாட்டத் தொடங்கியது. கேரளத்தில் மழை குறைந்ததாலும், காற்றில் ஈரப்பதம் குறைந்ததாலும் வெப்பம் அதிகம் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று காலை முதலே சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்சமாக 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வெப்பச் சலனத்தால் ஒடிசா மாநில கடலோரப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே சென்னையில் காலை முதல் மேகமூட்டம் காணப்படுகிறது. மற்றபடி, தமிழகத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை.
தமிழகத்தை பொருத்தவரை அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே, ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 35 டிகிரி மற்றும் 28 டிகிரி செல்சியஸாக இருக்கும்.