

சவுகார்பேட்டையில் லிப்ட்டில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை சவுகார்பேட்டை பிகேஜி பிரதான சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கணபதி. 5 தளங்களை கொண்ட இந்த குடியிருப்பில் 5-வது தளத்தில் வசிக்கிறார். இவரது மகன் அபிஷேக்(23). ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
நேற்று காலையில் பணிக்கு செல்ல வீட்டில் இருந்து வெளியே வந்த அபிஷேக், லிப்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். லிப்ட்டில் அவர் மட்டுமே இருந்தார். 5 மற்றும் 4-வது மாடிகளுக்கு இடையே லிப்ட் வந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் லிப்ட் இயங்காமல் நின்று விட்டது. லிப்ட்டுக்குள் சிறிது நேரம் காத்திருந்த அபிஷேக், பின்னர் அதிலிருந்து வெளியேற முயற்சி செய்தார்.
லிப்ட்டின் கிரில் கதவுகளை திறந்த அபிஷேக், லிப்ட்டின் வாசல் ஓரம் வந்து மேலே இருந்த சுவரை பிடித்து வெளியேற முயன்றார். ஆனால் அப்போது பேலன்ஸ் கிடைக்காமல் லிப்ட் டுக்கும்-சுவருக்கும் இடையே இருந்த இடைவெளி வழியாக கீழே விழுந்தார்.
லிப்ட் இருந்த பகுதிக்கு உள்ளேயே 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடினார். அவரது தலை மற்றும் இடுப்பு பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
குடியிருப்பில் இருந்தவர்கள் அபிஷேக்கை மீட்டு, அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அபிஷேக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். யானைக்கவுனி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அபிஷேக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லிப்டுக்குள் சிக்கினால்...
இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையை சேர்ந்த குமார் கூறியதாவது:
லிப்ட்டுக்குள் சிக்கிக்கொண் டால் உடனே நமது செல்போன் மூலம் வெளியே இருப்பவர் களுக்கு தகவல் கொடுத்து உதவி கேட்கலாம். லிப்ட்டுக்கு உள்ளேயே இப்போது தொலை பேசி வசதி இருப்பதால், அதை பயன்படுத்தியும் தகவல் தெரிவிக்கலாம்.
பெரும்பாலான லிப்ட்டில் அலாரம் வசதி இருக்கும். அதை ஒலிக்கச் செய்வதன் மூலம் உள்ளே நாம் சிக்கி இருப்பதை வெளியே இருப்பவர்கள் அறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.