Published : 20 Feb 2017 06:18 PM
Last Updated : 20 Feb 2017 06:18 PM

கீழடி அகழ்வாய்வுக்கு அனுமதி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு

கீழடி அகழ்வாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்றும், அதனை வரவேற்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ''சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாய்வை தொடர மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமுஎகச உள்ளிட்ட அமைப்புகளின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் இது.

வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடியில் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் 5000-த்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த ஆய்வினை மேலும் தொடர்ந்தால் தமிழர்களின் தொன்மையான நாகரிகம் குறித்த வரலாறு வெளிவரும். இந்நிலையில் மத்திய அரசு இந்த ஆண்டு ஆய்வை தொடர அனுமதி அளிக்காமலும், நிதி ஒதுக்காமலும் இருந்தது.

கீழடியில் ஆய்வை தொடர அனுமதியளித்து உரிய நிதி ஒதுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது. கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கீழடிக்கு சென்று ஆய்வை பார்வையிட்டு இது தொடர வேண்டுமென வலியுறுத்தினர். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநிலங்களவையில் இதுகுறித்து பேசினார். மேலும் தமுஎகச சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், கீழடி அகழ்வாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.

அங்கு மாநில அரசு ஒதுக்கியுள்ள இடத்தில் காட்சி அருங்காட்சியகம் அமைக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, கீழடியில் புதைந்துள்ள வரலாற்று உண்மைகள் முழுமையாக வெளிவரும் வரை ஆய்வினை தொடர வேண்டுமென்று கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x