கடலில் மூழ்கி பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்
காசிமேடு கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்த ரகுபதி, ஜெகன் ஆகியோரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை தண்டையார் பேட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பாஸ்கரின் மகன் ரகுபதி, ராஜரத்தினத்தின் மகன் ஜெகன் ஆகியோர் கடந்த 13-ம் தேதி காசிமேடு கடலில் குளிக்கச் சென்றபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த ரகுபதி, ஜெகன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 1 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயல லிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
