

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் பாஜகவின் தருண் விஜயின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியின் மத்திய பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (வியாழக்கிழமை) பங்கேற்ற பாஜகவின் தருண் விஜய் வருகையை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருண் விஜய்க்கு எதிராக தொடர்ந்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தருண் விஜய்க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். எனினும் மாணவர்கள் விழா நடைபெறும் கட்டிடத்துக்கு வெளியே திரண்டு தொடர்ந்து தருண் விஜய்க்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக டெல்லியில் ஆப்பிரிக்க மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை நிறவெறி என அந்நாட்டின் தலைவர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய், ‘‘இந்தியர்களிடம் நிறவெறி கிடையாது. அப்படி இருந்திருந்தால் தென் மாநிலங்களில் கறுப்பு நிறமாக உள்ள மக்களுடன் எப்படி நாங்கள் சேர்ந்து வாழ்வோம்’’ என தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தனது கருத்துக்கு தருண் விஜய் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
இந்த நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைகழக நிகழ்ச்சியில் பங்கேற்ற தருண் விஜய்க்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.