

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே மழவராயன்பட்டி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஏற்றத்தின் உதவியுடன் கிணற்றுப் பாசனம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு வறட்சியால் ஏற்றம் பயன்பாடின்றி முடங்கி உள்ளது என விவசாயி கவலை தெரி வித்துள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் கும் அடிப்படையாகத் திகழ்வது வேளாண் தொழில். பருவமழை குறைவு, மின்சாரம் பற்றாக்குறை, விளைபொருட்களின் விலை குறைவு, இடுபொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் விளை நிலங்கள் விலை நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
வேளாண் தொழிலைத் தடை யின்றி மேற்கொள்ளவும், விளைச் சலை அதிகரிக்கவும் முற்றிலுமாக இயந்திரமயமாக்கும் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாரம்பரிய வேளாண் கருவிகளின் பயன்பாடு குறைந்து வருகிறது. எனினும், புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே மழவராயன்பட்டியில் கிணற்றில் இருந்து பாரம்பரிய முறையான கமலை ஏற்றம் மூலம் தண்ணீர் இறைத்து சாகுபடி மேற் கொள்ளப்பட்டு வந்தது.
கடந்த 30 ஆண்டுகளாக பயன் பாட்டில் இருந்த கமலை ஏற்றம், இந்த ஆண்டு கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பயன்பாடின்றி முடங்கியுள்ளது. இதனால், சாகுபடி மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த விவசாயி கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மழவராயன்பட்டி யைச் சேர்ந்த கருப்பன் என்ற எம்.கருப்பையா(90) கூறியதாவது: ‘‘இந்த ஊரில் 50-க்கும் மேற்பட்ட கிணறுகளில் கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக சுமார் 30 அடி ஆழமுள்ள கிணறுகளை வெட்டி, அதில் மாடுகளைப் பூட்டி ஏற்றம் மூலம் தண்ணீரை இறைத்து பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மழையும் குறையத் தொடங்கியதால் கிணறுகள் வறண்டன. இதனால் படிப்படியாக மற்றவர்கள் ஏற்றம் மூலம் தண்ணீர் பாய்ச்சு வதை நிறுத்தியதால் தற்போதுள்ள இளைஞர்களுக்கோ, காளை களுக்கோ ஏற்றம் மூலம் தண்ணீர் இறைக்கத் தெரியாமல் போய் விட்டது.
உழவுக்கு டிராக்டர், தண்ணீர் இறைக்க மோட்டார் என்றெல்லாம் பயன்படுத்தி விவசாயம் செய்தால் கட்டுபடியாகாது என்பதால் ஏற் றத்தை விடாமல் பயன்படுத்தி வருகிறேன். ஏற்றத்தின் மூலம் முன்பைபோல முப்போகம் அல் லாமல் ஆண்டுக்கு வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஒரு போகம் மட்டும் கடந்த ஆண்டுவரை விவசாயம் செய்துவந்தேன். கடந்த 2012-ல் வறட்சி ஏற்பட்டு, தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்தபோதும்கூட நான் ஏற்றம் மூலம் தண்ணீர் இறைத் தேன். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில், இந்த ஆண்டுதான் என் கிணறு வறண்டுவிட்டது.
தீவனத்துக்கும் வழியில்லை
இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விளைநிலம் தரிசாக உள்ளது. ஏர் உழவு போன்ற கூலி வேலைக்கும் செல்ல முடியாததால் மாடுகளுக்கு தீவனம்கூட வாங்க வசதி இல்லை. தேவைப்படும் நேரங்களில் புதிதாக மாடுகளை வாங்கிப் பயன்படுத்தலாம் என் றாலும், புதிய மாடுகளுக்கு கமலை ஏற்றம் இழுக்கத் தெரியாது என்பதால் வேறு வழியின்றி தற்போது உள்ள ஒருஜோடி காளையை விற்கவில்லை.
என்னிடம் உள்ள காளைகள், வீட்டில் அவிழ்த்துவிட்டால் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றடிக்குச் சென்று, அதனதன் இடத்தில் சரியாக நின்றுவிடும். தண்ணீர் இறைத்து முடித்ததும் வீட்டுக்கு தாமாகவே சென்றுவிடும். எனக்குப் பிறகு குடும்பத்தில் யாருக்கும் ஏற்றம் இறைக்கத் தெரியாது என்பதால் என் உயிர் இருக்கும்வரை இந்த மாடுகளை விற்காமல் பராமரித்து வருவேன். அரசு மானியத்தில் டீசல் இஞ்சின் பொருத்தப்பட்ட மோட்டார் கொடுக்குமாறு கேட்டும் கிடைக்கவில்லை. வறட்சி நிவாரணமும் கொடுக்கவில்லை என்பதுதான் என் கவலையாக உள்ளது’’ என்றார்.