பருவமழை தாமதத்தால் நீடிக்கும் வறட்சி: மேய்ச்சல் நிலமான கடனா அணை

பருவமழை தாமதத்தால் நீடிக்கும் வறட்சி: மேய்ச்சல் நிலமான கடனா அணை
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் பருவமழையின்றி வறட்சி நீடிப்பதால் கடனா அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் திருநெல் வேலி மாவட்டத்தில் நெல் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கார் பருவத்தில் 14 ஆயிரம், பிசான பருவத்தில் 54,400, கோடையில் 4 ஆயிரம் ஹெக்டேர் என்று, மொத்தம் 72,400 ஹெக்டேரில் நெல் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அச்சம்

ஆனால் மழை இல்லாததால் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும் விவசாயம் பொய்த்துப்போயிருக்கிறது. குடிநீருக்கும் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. குடிநீருக்காக மக்கள் போராட் டங்களை நடத்தி வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள், பொதுமக்கள் காத்திருக்கின்றனர். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சுட்டெரித்த வெயிலை போன்றே தற்போதும் வெயிலின் தாக்கம் அதிகமுள்ளது. ஜூன் மாதம் தொடங்கி 2 வாரங்கள் கடந்த பின்னரும் மழை பெய்யாததால் கார் பருவ சாகுபடி இவ்வாண்டும் பிசுபிசுத்துவிடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் இருக்கிறது.

சாகுபடி பாதிப்பு

மாவட்டத்தில் தொடர்ந்து வறட்சி நீடிப்பதால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கடனா அணை உள்ளிட்ட அணைப்பகுதிகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறிவிட்டன.

85 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கடனா அணையில் நேற்று 46 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மூலம் அப்பகுதியில் 5 ஆயிரம் ஏக்கருக்கும்மேல் நெல் உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி நடைபெற்று வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அணையில் தண்ணீர் எதிர்பார்த்த அளவுக்கு பெருகவில்லை என்பதால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

அணையின் பழுதடைந்த ஷட்டர் வழியாக கசியும் 8 கனஅடி தண்ணீரைக் கொண்டு இப்பகுதியில் சில விவசாயிகள் நெல், சிறுகிழங்கு உள்ளிட்ட சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். பருவமழைக்கு முன்னர் அணையின் ஷட்டரை பழுதுபார்க்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஷட்டர் சரிசெய்யப்படுமா?

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பி.வேலுமயில் கூறும்போது, ‘கடனா அணை ஷட்டரில் பழுது ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது. ஷட்டரை சரிசெய்ய அரசுத் தரப்பு முன்வரவில்லை. மாவட்டத்தில் கடந்த பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பிரிமியம் செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.

இந்நிலையில் வரும் சாகுபடி பருவத்துக்கு பயிர் காப்பீடு செய்யுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே செலுத்தப்பட்டதற்கு காப்பீட்டு தொகை கிடைக்காத நிலையில் அடுத்த பருவத்துக்கு காப்பீட்டு தொகையை எப்படி செலுத்த முடியும்’ என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in