

மின்வெட்டுப் பிரச்சினை, சிவாஜி கணேசன் சிலை விவகாரத்தில், தமிழக அரசு மீது தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறை கூறினார்.
டெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடுவதையொட்டி, அங்குள்ள கட்சியினருடன் ஆலோசனை நடத்த விஜயகாந்த் இன்று டெல்லிக்குப் புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி தேர்தலில் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்து அவர் கூறும்போது, நடப்பு ஆண்டில் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என முதல்வர் கூறியது என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பியவர், தமிழக அரசு அனைத்து பிரச்சினைக்கும் மத்திய அரசைக் குறை கூறுவது சரியல்ல என்றார்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்றுவது குறித்த அரசின் நிலைப்பாடு குறித்து கூறும்போது, சாலைகளில் பல சிலைகள் இருக்கும்போது சிவாஜி சிலையை மட்டும் அகற்ற நினைப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார் விஜயகாந்த்.