

நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களின் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 21 ஆகக் குறைக்கக் கோரி சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ உள்பட 13 தலைவர்களுக்கு மதுரை மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
“இந்தியாவின் இன்றைய நிலைக்குக் காரணமான அரசியல் தலைவர்களே! வணக்கம். தாய் மண்ணுக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்ற ஏராளமான வீர இளைஞர்கள் வாழ்ந்த தேசமிது. அந்த லட்சிய இளைஞர்களின் உயிர்த் தியாகத்துக்கு உயிர் கொடுக்க விரும்பும் இளைஞர்கள் நாங்கள். எங்களது உண்மையான உணர்வின் வெளிப்பாடாக இக்கடி தத்தை எழுதியுள்ளோம்” என்று தொடங்கும் அந்தக் கடிதத்தில், இன்றைய இந்தியா எப்படி இருக்கிறது? அதற்குக் காரணம் யார்? என்று தங்களது பார்வையில் விரிவாக எழுதியிருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து “நாட்டின் மக்கள் தொகையில் 25 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் மட்டும் சரிபாதிக்கும் மேல் இருக்கிறோம். எங்களது எதிர்காலத்தைப் பற்றி அக்கறை இல்லாதவர்களை நம்பி எப்படி எங்கள் வாழ்க்கையை ஒப்படைக்க முடியும்? எனவே, எங்கள் தலைமுறையில் இருந்து நாட்டுப்பற்றுள்ள உண்மையான அரசியல் தலைவர்கள் உருவா னால் மட்டுமே எங்களால் நிம்மதி யாக வாழ முடியும் என்று உறுதி யாக நம்புகிறோம்.
எங்களிடம் நாட்டுப்பற்று அதி கம். தேர்தலில் போட்டி யிடும் வயதை 25ல் இருந்து 21 ஆகக் குறைக்கப்பட்டிருந்தால், நிச்சய மாக ஏராளமான மாணவர்கள் அரசியலுக்கு வந்திருப்பார்கள். கடந்த 1988-ம் ஆண்டு அரசியல் சாசனம் 61-வது முறையாகத் திருத்தப்பட்டு, வாக்களிக்கும் வயது 21-ல் இருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டது. இக்கால இளைஞர்கள் பெரிதும் அரசியல் ஞானம் பெற்றுள்ளதால், வாக்களிக்கும் வயது குறைக்கப்பட்டதாக அந்தச் சட்டம் கூறுகிறது. அப்படியானால், தேர்தலில் நிற்பதற்கான வயதை ஏன் குறைக்கவில்லை? கொடிபிடிக்கவும், கோஷம் போடவும் மட்டும் இளைஞர்கள் வேண்டுமா?
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில், மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள இளைஞர்களை நாடாளுமன்றத்துக்குள்ளேயே நுழையவிடாமல் தடுப்பது ஜன நாயக விரோதம் இல்லையா? இளைஞர்கள்தான் நாட்டின் எதிர்காலம் என்று நீங்கள் முழக்க மிடுவது உண்மை என்றால், தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆகக் குறைத்திடும் சட்டத்திருத்தம் உடனே கொண்டு வர வேண்டும். கிரிமினல்கள் தேர்தலில் போட்டி யிடத் தடை என்ற பிரச்னை வெடித்தபோது் உடனடியாக நாடாளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவைக் கொண்டு வந்து சட்டத்தைத் திருத்தினீர்கள். அதே அக்கறையை இளைஞர்களின், நாட்டின் எதிர்காலத்துக்காகவும் காட்டுவீர்கள் என்று நம்புகிறோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதைச் செய்யாவிட்டால், போராடவும் தயங்க மாட்டோம்” இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
இந்தக் கடிதத்தில் மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் 100 பேர் கையெழுத்திட்டு சோனியா, அத்வானி, மோடி, மம்தா பானர்ஜி, பிரகாஷ் காரத், கருணாநிதி, ஜெய லலிதா, விஜயகாந்த், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் உள்பட 13 தலைவர்களுக்கு கடந்த 13-ம் தேதி அனுப்பியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைக்காக சமுதாய மாற்றத்துக்கான இளைஞர்கள் என்ற அமைப்பு மதுரையில் மனிதச்சங்கிலி நடத்தியது.