

கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில், அதிமுக பிரமுகர்கள் 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
சென்னை விருகம்பாக்கம் குமரன் நகர் 3-வது தெருவில் வசிப்பவர் சேகர்(55). 127-வது வட்ட அதிமுக செயலாளராக இருக்கிறார். 1987-ம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வருகிறார். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி 127-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட கட்சி தலைமையிடம் சேகர் சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. ஏற்கெனவே இந்த வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக இருக்கும் மலைராஜனுக்கே மீண்டும் சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த சேகர், நேற்று முன்தினம் சாப்பிடாமல் இருந்துள்ளார். நேற்று காலை 5.30 மணியளவில் 20 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் தீக்குளிப்பு
திருவள்ளூரை சேர்ந்தவர் செல்வராணி. அதிமுக பிரமுகர். இவரும் கவுன்சிலர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட கட்சி தலைமையிடம் மனு தாக்கல் செய்திருந்தார். இவருக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால், மனமுடைந்த செல்வராணி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு வந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது உடல் முழுவதும் தீ பரவியது.
அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.