சுந்தரனார் பல்கலை., கல்லூரிகளில் எம்.பில். படிப்பு ரத்து; ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம்: துணைவேந்தர் தகவல்

சுந்தரனார் பல்கலை., கல்லூரிகளில் எம்.பில். படிப்பு ரத்து; ஆராய்ச்சி கல்விக்கு முக்கியத்துவம்: துணைவேந்தர் தகவல்
Updated on
2 min read

'திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளில், வரும் கல்வியாண்டு முதல் எம்.பில் படிப்புகள் ரத்து செய்யப்படும்' என, பல்கலைக்கழக கல்விசார் நிலைக்குழு கூட்டத்தில் துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பதிவாளர் ஜான் டி பிரிட்டோ, தேர்வாணையர் பிரபாகர் மற்றும் கல்விசார் நிலைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்

கூட்டத்தை தொடங்கி வைத்து துணைவேந்தர் பேசியதாவது:

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உலக தரத்துக்கு இங்குள்ள மாணவ, மாணவியரின் கல்வித்தரம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாடத்திட்டங்களிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அத்தகைய ஆராய்ச்சி கல்விமுறையால்தான் உலகளாவிய போட்டிக்கு நமது மாணவர்கள் ஈடுகொடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

எம்.பில். ரத்து

தொடர்ந்து கல்விசார் நிலைக்குழு உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து துணைவேந்தர் பேசியதாவது:

இப்பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளில் எம்.பில். படிப்பு இந்த கல்வியாண்டோடு நிறுத்தப்படுகிறது. அதற்கு மாற்றாக பி.எச்டி. ஆராய்ச்சி படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இந்த படிப்பை மாணவர்கள் நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்து முடித்தநிலையில், தவிர்க்க முடியாத நிலையில் படிப்பை பாதியிலேயே நிறுத்தினால், சிறிய அளவிலான ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்து, அவர்கள் எம்.பில்., பட்டத்தை பெற்றுக் கொள்ளலாம். ஓராண்டு கழித்து அவர்கள் மீண்டும் பிஎச்.டி., படிக்க விரும்பினால், நேரடியாக மூன்றாம் ஆண்டில் சேர்ந்து படிக்கலாம்.

தற்போதைய சூழ்நிலையில் எம்.பில்., படிப்புக்கு போதிய வரவேற்பு இல்லை. ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் எம்.பில் படிப்பை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எம்.பில்., படிப்புக்குரிய விதிமுறைகள் அனைத்தும், பிஎச்.டி. படிப்புக்கும் பின்பற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கணினி கல்வி, யோகா

கல்விசார் நிலைக்குழு மேற்கொண்ட முடிவுகள் குறித்து கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்ற விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. வரும் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் கம்ப்யூட்டர் கல்வி மற்றும் யோகா ஆகியவை கட்டாயமாக்கப்படுவது குறித்த விவாதத்தில் பல்வேறு பேராசிரியர்களும் பேசினர்.

கணினி கல்வி மற்றும் யோகா பாடங்களை கட்டாயமாக்க கூடாது என சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பாடங்களை முறையாக கற்றுத்தேர்ந்த ஆசிரியர்களை கல்லூரி நிர்வாகம் நியமிக்காது. இதனால், இந்த திட்டம் சிறப்பாக இருக்காது என்று அவர்கள் கூறினர்.

இதற்கு துணைவேந்தர் பதில் அளிக்கும்போது, ``தற்போது உலகமே கணினி மயமாகியிருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவுக்கு அனைவரும் மாற வேண்டும் என மத்திய அரசும் அதை ஊக்குவித்து வருகிறது. இச்சூழ்நிலையில் மாணவர்களுக்கு கணினி கல்வி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். பட்டப்படிப்புகளில் அதை கற்றுத்தர வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது. எதிர்காலத்தில் பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமாக வேண்டும் என்றால் அனைவரும் கணினி கல்வி கற்றிருக்க வேண்டியது அவசியம்.

இது போல் சர்வதேச அளவில் யோகா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகா பாடத்தை ஐக்கிய நாடுகள் சபையே அங்கீகரித்துள்ளது. அவ்வளவு சிறப்புமிக்க இப்பாடத்தை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

விடைத்தாள் திருத்தம்

தகுதியான ஆசிரியர்களை கொண்டு விடைத்தாட்களை திருத்த வேண்டும். சுயநிதி கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அவர்களை கொண்டு விடைத்தாள்களை திருத்தினால் அது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என் உறுப்பினர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த துணைவேந்தர், சுயநிதி கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்களா என்பதை அறிய அவர்களது தகுதி விபரங்கள் ஆன்லைனில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் விடைத்தாள்களை திருத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் வருவதில்லை. எனவே, சுயநிதி கல்லூரிகளில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்படுகின்றனர்” என்றார் துணைவேந்தர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in