

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற் றது. மாநிலத் தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் பத்மநாபன் வரவேற்றார்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுத் துறை நிறுவனங்களான போக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு, வங்கி, இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்படுகிறது. அது போல், வேலைநிறுத்தப் போராட்டத் தில் பங்கேற்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
13-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி சேவைத் துறையை அரசே முழுமையாக ஏற்கும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தையும் அரசுத் துறையாக்க வேண்டும். தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். ஓய்வுகால நிலுவைத் தொகை, ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகை என அனைத்து நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.