இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு விவேகானந்தர் ரத ஊர்வலம்: சென்னையில் பூஜையுடன் தொடங்கியது

இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு விவேகானந்தர் ரத ஊர்வலம்: சென்னையில் பூஜையுடன் தொடங்கியது
Updated on
2 min read

இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு விவேகானந்தர் ரத பூஜை நிகழ்ச்சி மயிலாப்பூரில் நேற்று நடந்தது.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி, வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி விவேகானந்தர் ரதங்கள் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரதங்களுக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று பூஜை நடத்தி, ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டது.

மொத்தம் 25 ரதங்களில் விவேகானந்தர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டன. சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தா, ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் துணைத் தலைவர் ராஜலட்சுமி, நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டோர் ரத பூஜையில் பங்கேற்றனர்.

இந்து சமய ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி தொடர்பாக ‘தி இந்து’விடம் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாவது:

இந்து மதம் என்றாலே கருணையற்றது; சேவை செய்யும் எண்ணமும், ஈரமும் இல்லாத மதம் என்ற பார்வை வெளிநாடுகளில் உள்ளது. அது உண்மை இல்லை. சத்யசாய் ஆன்மிக அறக்கட்டளை 3 மாவட்டங்களுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளது. தெலுங்கு - கங்கை திட்டத்துக்கு வித்திட்டது அதுதான். ராமகிருஷ்ணா மடமும் எண்ணற்ற சேவைகளை செய்துள்ளது. ஆனால், இந்து தர்மப்படி சேவைகளை விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று கருதி இந்து அமைப்புகள், தாங்கள் செய்பவற்றை வெளியில் சொல்வதில்லை.

இந்தச் சூழலில்தான் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை 2009-ம் ஆண்டு தொடங்கினோம். அதில் 30 ஆன்மிக அமைப்புகளும், 2 லட்சம் பேரும் பங்கேற்றனர். இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்தது. 8-வது கண்காட்சி, மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்குகிறது. இதில் சுமார் 350 இந்து ஆன்மிக அமைப்புகள் கலந்துகொள்ள உள்ளன.

கண்காட்சியை 2-ம் தேதி மாலை 4 மணிக்கு யோகா குரு பாபா ராம்தேவ் தொடங்கி வைக்கிறார். அப்போது, கங்கை-காவிரி மங்கல தீர்த்த கலச யாத்திரை நிகழ்வு நடக்கும். ஆகஸ்ட் 8-ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. இதில் சீக்கிய, புத்த, ஜைன மதங்களின் முக்கிய துறவிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் கண்காட்சியில் 1,500 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கன்னிகா வந்தனம் செய்யப்படும். மேலும், துளசி வந்தனம், பரம்வீர் வந்தனம், குரு வந்தனம், விருட்ச வந்தனம், நாக வந்தனம் என ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

காடுகளையும், விலங்கு களையும் பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், சுற்றுப்புறத்துக்கு தீங்கு ஏற்படுத்தக் கூடாது, குடும்ப மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைப்பிடிக்க வேண்டும் ஆகிய 6 அம்சங்களை வலியுறுத்தியே இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கருத்துகளை வலியுறுத்தும் வண்ணம்தான் ரத ஊர்வலம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந் தோம். 25 ரதங்கள் விவேகானந்தரின் சிலைகளை தாங்கி ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற மெகா இசை நிகழ்ச்சி மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இதேபோல, 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி கடந்த 17-ம் தேதி நடத்தப்பட்டது. 20 ஆயிரம் பள்ளி மாணவர்கள் விவேகானந்தர்போல உடையணிந்து செல்லும் ஊர்வலம் சென்னை மெரினா கடற்கரையில் வரும் 30-ம் தேதி நடக்கவுள்ளது. அந்த நிகழ்ச்சியில், மேகாலய ஆளுநர் வி.சண்முகநாதன், திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in