Last Updated : 13 Jun, 2017 03:21 PM

 

Published : 13 Jun 2017 03:21 PM
Last Updated : 13 Jun 2017 03:21 PM

கீழடி அகழாய்வு அதிகாரி இடமாற்றம்; தமிழர் வரலாற்றை மறைக்க முயற்சி நடைபெறுகிறதா?- உயர் நீதிமன்றம் அதிருப்தி

சிவகங்கை கீழடியில் அகழாய்வு பணி மேற்கொண்ட தொல்லியல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டது, அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்பட்டது போன்றவை தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சி செய்வது போல் உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு:

"மதுரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000 ஆண்டு பழமையான 5300 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. அதே நேரத்தில் சுமார் ஒரு ஏக்கர் அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கீழடியில் அகழ்வாய்வை தொடரவும், பழங்கால பொருட்களை கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்"

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. சிறப்பு அரசு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, கீழடியில் 2 கட்ட அகழாய்வு முடிந்துள்ளது. தற்போது 3-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. கொந்தை கிராமத்தில் அருங்காட்சியம் அமைக்க தமிழக அரசு 2 ஏக்கர் இடம் ஒதுக்கியுள்ளது. அங்கு அருங்காட்சியகம் அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

தொல்லியல்துறை சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை ஆய்வுக்காக பெங்களூரு எடுத்துச்செல்ல வேண்டியதுள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அந்த பழங்கால பொருட்களை ஏன் பெங்களூருக்கு கொண்டு செல்ல வேண்டும். சிவகங்கையில் வைத்தே ஆய்வு செய்யலாமே என்றனர்.

அதற்கு பெங்களூரில் தான் பழங்கால பொருட்களை ஆய்வு செய்யும் நிபுணர்கள் உள்ளனர் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தொடர்ந்து நீதிபதிகள், பெங்களூரில் உள்ள தொல்லியல் நிபுணர்களை சிவகங்கைக்கு வரவழைத்து பழங்கால பொருட்களை ஆய்வு செய்யலாமே. கீழடியில் அகழ்வு பணியை முன்னின்று நடத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சி செய்வது போல் உள்ளது என்றனர்.

அதற்குக் கீழடியில் ஆய்வு நடத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மட்டும் இடமாற்றம் செய்யப்படவில்லை. அவருடன் சேர்ந்து 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அப்போது இடமாற்றம் செய்யப்பட்டனர் என மத்திய அரசு வழக்கறிஞர் பதிலளித்தார். பின்னர் விசாரணையை ஜூன் 23-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x